/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சியில் 11 கொள்ளை: 3 கில்லாடிகள் சிக்கினர் 100 கேமராக்களை ஆய்வு செய்து போராடி பிடித்த போலீஸ்
/
காஞ்சியில் 11 கொள்ளை: 3 கில்லாடிகள் சிக்கினர் 100 கேமராக்களை ஆய்வு செய்து போராடி பிடித்த போலீஸ்
காஞ்சியில் 11 கொள்ளை: 3 கில்லாடிகள் சிக்கினர் 100 கேமராக்களை ஆய்வு செய்து போராடி பிடித்த போலீஸ்
காஞ்சியில் 11 கொள்ளை: 3 கில்லாடிகள் சிக்கினர் 100 கேமராக்களை ஆய்வு செய்து போராடி பிடித்த போலீஸ்
ADDED : பிப் 22, 2025 11:59 PM

காஞ்சிபுரம், காஞ்சிபுரத்தில் சமீப காலமாக பூட்டியிருக்கும் வீடுகளில் புகுந்து நகை, பணம், பொருட்களை கொள்ளையடிப்பதை ஒரு கும்பல் வழக்கமாக கொண்டிருந்தது.
அதேபோல், சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்த கும்பல் தொடர்பாக, காஞ்சிபுரத்தில் பதிவான ஏழு வழக்குகள் உட்பட 11 வழக்குகள் பதிவாகியிருந்தன. வடக்கு மண்டல ஐ.ஜி., அஸ்ராகார்க் உத்தரவின்படி, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், டி.எஸ்.பி., சங்கர்கணேஷ் ஆகியோர், ஆய்வாளர் பிரபாகர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், 100க்கும் மேற்பட்ட 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், கொள்ளை நடந்த இடத்தில் வந்த மொபைல் போன் அழைப்புகள், 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகள் ஆகிய தடயங்களை ஆய்வு செய்து வந்தனர். அதன்பின், 'சிசிடிவி' காட்சிகளில் பதிவான முகங்களை அடையாளம் கண்டனர்.
முந்தைய குற்றச் சம்பவங்களை சாப்ட்வேர், பதிவேடுகள் உள்ளிட்டவை மூலம் சரிபார்த்ததில், ஏற்கனவே பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டோர் தான் மீண்டும் கைவரிசை காட்டி வருவது தெரியவந்தது.முதற்கட்ட விசாரணையில், சென்னை, பல்லாவரம், மூங்கில் ஏரி பகுதியைச் சேர்ந்த அமீர் என்கிற சதாம் உசேன், 33, கொள்ளை சம்பவங்களில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், அவரிடம் கிடைத்த தகவல்களை கொண்டு, அம்பத்துார் அருகே உள்ள அயப்பாக்கத்தைச் சேர்ந்த ரிபாய்தீன், 30, என்பவரை கைது செய்தனர்.
இதை தொடர்ந்து, பல்லாவரம், கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த சுரேஷ், 25, என்பவரையும் கைது செய்தனர்.
இந்த மூவரும் கொள்ளையடித்த சம்பவங்களை ஒப்புக்கொண்டனர். கொள்ளை கும்பலை பிடித்த தனிப்படை போலீசாரை, போலீஸ் எஸ்.பி., சண்முகம் பாராட்டினார்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும், பல்வேறு வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட, 25 சவரன் தங்க நகைகள், 3 கிராம் டைமண்ட், 340 கிராம் வெள்ளி, மூன்று மாருதி கார், ஒரு யமஹா பைக், இரண்டு ஆட்டோ, ஒரு லேப்டாப், இரண்டு மொபைல் போன்கள் என, 23.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.