/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
12 மணி நேரம் மின் வெட்டு மின்வாரியம் முற்றுகை
/
12 மணி நேரம் மின் வெட்டு மின்வாரியம் முற்றுகை
ADDED : ஜூலை 07, 2024 12:45 AM

திருப்போரூர்:செம்பாக்கம் பகுதியில், நேற்று முன்தினம் காற்றுடன் மழை பெய்தபோது, மின் கம்பங்களில் ஏற்பட்ட பழுதால் இரவில் 12 மணி நேரத்திற்கு மேல் மின் தடை ஏற்பட்டது.
இதை கண்டித்து, அப்பகுதிவாசிகள் மின் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் ஊராட்சியில், 1,500 குடும்பங்கள் உள்ளன. இங்கு, அரசு மேல்நிலைப்பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, கூட்டுறவு வங்கி, கோவில்கள் உள்ளன.
இப்பகுதியில், மின் கம்பி இணைப்புகள் பல இடங்களில் பழுதாகி அடிக்கடி மின் தடை ஏற்படுவது வாடிக்கை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் பெய்த சிறு மழையின்போது மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, 12 மணி நேரத்திற்கு மேல் கழித்து, நேற்று காலை 10:00 மணிக்கு தான் இணைப்பு வழங்கப்பட்டது.
இதனால், இப்பகுதி வாசிகள் இரவு முழுதும் மின்சாரம் இன்றி கடும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று காலை செம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை ஊராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர்கள் உட்பட அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, 'தற்காலிகமாக பழுதை சரிசெய்துள்ளோம். விரைவில் அனைத்து இடங்களிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் ' என, அதிகாரிகள் தெரிவித்தனர். பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.