/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
46 கோவில் நிலத்திற்கான வாடகை பாக்கி ரூ.3 கோடிஅதிர்ச்சி! : 'டிமிக்கி' கொடுப்போருக்கு அறநிலைய துறை நோட்டீஸ்
/
46 கோவில் நிலத்திற்கான வாடகை பாக்கி ரூ.3 கோடிஅதிர்ச்சி! : 'டிமிக்கி' கொடுப்போருக்கு அறநிலைய துறை நோட்டீஸ்
46 கோவில் நிலத்திற்கான வாடகை பாக்கி ரூ.3 கோடிஅதிர்ச்சி! : 'டிமிக்கி' கொடுப்போருக்கு அறநிலைய துறை நோட்டீஸ்
46 கோவில் நிலத்திற்கான வாடகை பாக்கி ரூ.3 கோடிஅதிர்ச்சி! : 'டிமிக்கி' கொடுப்போருக்கு அறநிலைய துறை நோட்டீஸ்
ADDED : ஜன 10, 2025 02:22 AM

மறைமலைநகர்:செங்கல்பட்டு புறநகர் பகுதியில், சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் கட்டுப்பாட்டில், 46 கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சொந்தமான நிலங்களுக்கான வாடகை பாக்கி, 3 கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது, பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில் செயல் அலுவலகம் கட்டுப்பாட்டில் பாடலாத்திரி நரசிம்ம பெருமாள் கோவில், திருக்கச்சூர் மருந்தீஸ்வரர் கோவில், தியாகராஜர் கோவில், சுட்டி புண்ணியம் தேவநாத பெருமாள் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், செங்கல்பட்டு ஏகாம்பரேஸ்வரர் கோவில், செங்கப்பட்டு கோதண்டராமர் கோவில், நந்திவரம் நந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட, 46 பழமையான கோவில்கள் உள்ளன.
இந்த கோவில்களுக்கு சொந்தமாக செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான நந்திவரம் - கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், திருக்கச்சூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டு மனைகள், விவசாய நிலங்கள், கடைகள் உள்ளிட்டவை உள்ளன.
இக்கோவில்களுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், ஏலம் முறையில் ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு விடப்பட்டு வருகின்றன. தற்போது புறநகர் பகுதிகளில், நகரமயமாக்கல் காரணமாக, விவசாயம் கைவிடப்பட்டு வருகிறது.
இதுபோன்ற காலியாக உள்ள நிலங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டப்பட்டு வருகின்றன. கோவில்களுக்கு சொந்தமான வீட்டு மனைகள் தரை வாடகைக்கு விடப்பட்டு உள்ளன.
மேலும், வணிக கட்டடங்களில் ஹோட்டல்கள், மளிகை கடைகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் வாடகைக்கு இருப்போர், முறையாக வாடகை செலுத்துவது இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த வகையில், 3 கோடியே 32 லட்சத்து 73 ஆயிரத்து 983 ரூபாய் வாடகை பாக்கி உள்ளது. இந்த வருவாய் இழப்பால், பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து, பக்தர்கள் கூறியதாவது:
சிங்கபெருமாள் கோவில் செயல் அலுவலகம் கட்டுப்பாட்டில், நுாற்றுக்கணக்கான வீட்டு மனைகள், வணிக கடைகள் உள்ளன. பல ஆண்டுகளாக இவற்றை பயன்படுத்தி வருவோர், முறையாக வாடகை செலுத்துவது இல்லை.
குறிப்பாக, உள்ளூர் அரசியல் பலத்தை பயன்படுத்தி பல கட்சி பிரமுகர்கள், கோவில் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி, வெளியூர் மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதுமட்டுமின்றி சிங்கபெருமாள் கோவில், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு பிரதான சாலைகளில், கோவில் இடங்களில் பல கடைகள் கட்டி, வாடகைக்கு விட்டு வருகின்றனர்.
தங்களின் பெயரில் வாடகை ரசீது வைத்துள்ள பலர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த கடைகளை, 10 மடங்கு அதிகமான தொகைக்கு உள்வாடகைக்கு விட்டு, பணம் சம்பாதித்து விடுகின்றனர்.
ஆனாலும், கோவில் நிர்வாகம் சார்பில் விதிக்கப்படும் குறைந்தபட்ச வாடகை தொகையைக் கூட செலுத்துவது இல்லை.
வாடகைதாரர்கள் முறையாக வாடகை செலுத்தும் பட்சத்தில், கோவிலில் பக்தர்களுக்கு கூடுதல் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தலாம். கோவில் மேம்பாட்டிற்கும் இது உதவும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கோவில் நிலங்களுக்கான வாடகை, 3 கோடியே 32 லட்சத்து 73 ஆயிரத்து 983 ரூபாய் பாக்கி உள்ளது. முறையாக வாடகை செலுத்தும்படி, கோவில் நிலத்தில் குடியிருப்போருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
அதுமட்டுமின்றி, முறையாக வாடகை செலுத்தாத நபர்களின் பெயர் விவரங்கள், அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளன. நோட்டீஸ் பெற்றவர்கள் பாக்கியை செலுத்த வேண்டும்.
- ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரி.
செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளில், நாளுக்கு நாள் ரியல் எஸ்டேட் தொழில் பெருகி, இடத்தின் சந்தை மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கோவில் நிலங்கள் வீணாக உள்ளன. இந்த நிலங்களில் வணிக வளாகம், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பயனுள்ள கட்டடங்கள் கட்டி, குறைந்த கட்டணத்திற்கு வாடகைக்கு விட்டால் ஏழை, எளிய பக்தர்கள் பயன் பெறுவர். ஹிந்துசமய அறநிலையத்துறை நிர்வாகம் இதை ஆலோசிக்க வேண்டும்.
- இ.சத்யா,
சிங்கபெருமாள் கோவில்.

