/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வளர்ச்சி பணிகளில் வெளிப்படை தன்மை இல்லை...குற்றச்சாட்டு: முறைகேடை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம்
/
வளர்ச்சி பணிகளில் வெளிப்படை தன்மை இல்லை...குற்றச்சாட்டு: முறைகேடை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம்
வளர்ச்சி பணிகளில் வெளிப்படை தன்மை இல்லை...குற்றச்சாட்டு: முறைகேடை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம்
வளர்ச்சி பணிகளில் வெளிப்படை தன்மை இல்லை...குற்றச்சாட்டு: முறைகேடை தடுக்க அறிவிப்பு பலகை அவசியம்
ADDED : செப் 01, 2025 01:49 AM

காட்டாங்கொளத்துார்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளில் வெளிப்படை தன்மை இல்லாததால், முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், தற்போது நடைபெறும் பணிகள், விரைவில் துவங்க உள்ள பணிகள் குறித்து வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் அறியும்படி, சம்பந்தப்பட்ட பணிகள் நடைபெறும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 1961 ஏப்., 13ம் தேதி, 193.90 சதுர கி.மீ., பரப்பில், புதிதாக உருவாக்கப்பட்டது. இங்குள்ள 39 ஊராட்சிகளில், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்த ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளின் சாலைகளில் பெரும்பாலானவை, நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளன. நீர்நிலைகள் துார் வாரப்படாமல் உள்ளன.
இதுமட்டுமின்றி மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால், இணைப்பு கால்வாய் உள்ளிட்ட அடிப்படை கட்டுமான பணிகள், 20 சதவீத அளவில் கூட நடக்கவில்லை.
இந்நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில், ஊராட்சிகள்தோறும் நடந்து முடிந்துள்ள வளர்ச்சிப் பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகள், நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் துவங்க உள்ள பணிகள் குறித்த விபரங்களை, ஒன்றிய நிர்வாக அதிகாரிகள் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
இதனால், மக்கள் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஊராட்சிகள் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள், 30க்கும் மேற்பட்ட திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, பணிகள் துவக்கப்படுகின்றன.
அதன்படி சாலைகள் புனரமைப்பு, சிறுபாலம் அமைத்தல், குடிநீர் வசதி, வடிகால் அமைத்தல், அரசு அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல், மழைநீர் வடிகால், சுகாதார மையங்கள், பொது கழிப்பறை கட்டுதல் உட்பட, பல பணிகள் நிறைவேற்றப்படுகின்றன.
இந்த பணிகள் எந்தெந்த ஊராட்சிகளில், எந்தெந்த வார்டுகளில், எந்த திட்டங்களின் கீழ், எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகின்றன என்ற விபரங்களை, காட்டாங்கொளத்துார் ஒன்றிய நிர்வாகம் வெளிப்படையாக அறிவிப்பதில்லை.
இதனால், தங்கள் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடக்கும் பணிகள் குறித்த எவ்வித விபரங்களையும், பொதுமக்கள் அறிய முடியவில்லை.
ஒரு தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படும் போது, எந்த திட்டத்தின் கீழ், எவ்வளவு நிதியில் அந்த சாலை அமைக்கப்படுகிறது என தெரிய வேண்டும். மேலும், அந்த பணியின் ஒப்பந்ததாரர் யார் என்ற விபரம், பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகை மூலமாக, பகுதிவாசிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
அப்போது தான், நடைபெறும் பணி, ஒதுக்கப்பட்ட தொகையின்படி தரமாக நடக்கிறதா என, பகுதிவாசிகள் கண்காணிக்க முடியும்.
தவிர, ஒரு பணிக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன், அது குறித்த விபரங்களை மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஊராட்சி அலுவலகத்தின் முன், அறிவிப்பு பலகை வைத்தும், பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
ஆனால், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, எந்த இடத்திலும் வெளிப்படை தன்மை இல்லை. எங்கே வெளிப்படை தன்மை இல்லையோ, அங்கே முறைகேடுகள் தாராளமாக நடக்கும்.
எனவே, கடந்த நான்கு ஆண்டுகளில், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்தின் வளர்ச்சிக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி விபரங்களை, இணையத்தில் வெளியிட வேண்டும்.
தவிர, ஒதுக்கப்பட்ட நிதியில், இதுவரை முடிந்துள்ள பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அறிவிக்க வேண்டும். நிதி ஒதுக்கியும் துவக்கப்படாத பணிகள் குறித்தும், விபரம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரு பணிக்கான நிதி ஒதுக்கப்பட்ட உடன், அது குறித்த விபரங்களை மாவட்ட, ஒன்றிய நிர்வாகங்களின் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், ஊராட்சி அலுவலகத்தின் முன், அறிவிப்பு பலகை வைத்தும், பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.