/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை
/
கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டுகள் சிறை
ADDED : செப் 01, 2024 11:52 PM
சென்னை, : சென்னை ஓட்டேரி அருகே கஞ்சா விற்ற வழக்கில் கைதானவருக்கு, ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. சென்னை, ஓட்டேரி மயானம் அருகே கஞ்சா விற்பதாக, 2021 டிச., 7ல், தலைமை செயலக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்ற புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த தாமு என்ற தாமோதரன்,56, என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து, 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
கஞ்சா விற்பனையில், தொடர்ந்து தாமு ஈடுபட்டு வந்துள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போதிய ஆதாரங்கள், சாட்சிகளுடன், சந்தேகத்திற்கு இடமின்றி அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன.
குறைந்த தண்டனை வழங்க வேண்டும் என, குற்றம்சாட்டப்பட்ட நபர் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு, நீதிபதி தீர்ப்பளித்தார்.