/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
' பயோமைனிங் ' முறையில் குப்பை தரம் பிரிப்பு திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி
/
' பயோமைனிங் ' முறையில் குப்பை தரம் பிரிப்பு திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி
' பயோமைனிங் ' முறையில் குப்பை தரம் பிரிப்பு திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி
' பயோமைனிங் ' முறையில் குப்பை தரம் பிரிப்பு திருப்போரூர் பேரூராட்சிக்கு ரூ.50 லட்சம் நிதி
ADDED : ஜூலை 28, 2024 02:14 AM

திருப்போரூர்,:திருப்போரூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில், காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், 35,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 4,192 வீடுகள், 198 வணிக நிறுவனங்கள் வாயிலாக, தினமும் 4.5 டன் அளவுக்கு குப்பை சேகரமாகிறது.
இந்த குப்பைக் கழிவுகள், காலவாக்கத்தில் 4 ஏக்கர் பரப்பில் உள்ள பேரூராட்சியின் வளம்மீட்பு பூங்காவில் கொட்டப்படுகின்றன. அந்த இடம் நிரம்பியதால், அருகே உள்ள ஆறுவழிச்சாலை அருகே கொட்டப்படுகின்றன.
இவற்றில், 1 டன் குப்பையில் தினமும் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில், 1 கிலோ இயற்கை உரம், 5 ரூபாய்; மண் புழு உரம், 10 ரூபாய் என விற்பனை செய்யப்படுகின்றன.
எனினும், நாளுக்கு நாள் குப்பைக்கழிவுகள் அதிகரித்து, மலைபோல் குவிந்து வருகின்றன. மேலும், குப்பை குவியலில் மர்ம நபர்களால் அவ்வப்போது தீ வைப்பதால், அதிலிருந்து எழும் புகை காரணமாக, சுற்றுப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறு, உபாதைகள் ஏற்படுகின்றன.
ஆறுவழிச் சாலையை ஒட்டி அமைந்துள்ளதால், அதிக அளவில் வெளியேறும் துர்நாற்றம் மற்றும் தீப்பற்றி எரியும்போது ஏற்படும் புகைமூட்டம் காரணமாக, அவ்வப்போது போக்குவரத்து இடையூறும் ஏற்படுகிறது.
இப்பேரூராட்சியில் மலைபோல் குவிந்துள்ள குப்பையை அகற்றுவது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஒருபுறம் குப்பையை தரம் பிரித்து வழங்க, பேரூராட்சி நிர்வாகம் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், மக்கள் குப்பையை தரம் பிரித்து கொடுப்பதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், குப்பை குவியலை அகற்ற பேரூராட்சி நிர்வாகம், 'பயோ மைனிங்' இயந்திரம் வாயிலாக குப்பையை தரம் பிரிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை, 'துாய்மை இந்தியா இயக்கம் - -2.0' திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கொள்ள, 49.72 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பயோ மைனிங் முறையில் குப்பையை தரம் பிரித்து அகற்றும் பணிக்காக, நிதி ஒதுக்கி 'டெண்டர்' விடப்பட்டுள்ளது. பணி உத்தரவும் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் பணி துவங்கப்படும். இதனால், தேங்கிய குப்பை படிப்படியாக அகற்றப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
'பயோ மைனிங்' திட்டம் என்பது சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய தொழில்நுட்பம். குவியலாக தேங்கியுள்ள குப்பை, இயந்திரம் வாயிலாக தரம் பிரிக்கப்படும்.
இதில், மட்கும் குப்பை சலிக்கப்பட்டு, இயற்கை முறையில் உரமாக மாற்றப்படும். மட்காத குப்பையில் இருந்து மறு சுழற்சிக்கு பயன்படும் குப்பை மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, அவை முறையாக மறு சுழற்சி செய்யப்படும்.
இத்திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தினால், நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் குப்பையை விரைவில் அகற்றலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.