/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு மீனவர்களுக்கு ரூ.6.24 கோடி நிவாரண நிதி
/
செங்கல்பட்டு மீனவர்களுக்கு ரூ.6.24 கோடி நிவாரண நிதி
செங்கல்பட்டு மீனவர்களுக்கு ரூ.6.24 கோடி நிவாரண நிதி
செங்கல்பட்டு மீனவர்களுக்கு ரூ.6.24 கோடி நிவாரண நிதி
ADDED : ஏப் 28, 2024 01:52 AM
மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தின், 7,801 மீனவர்களுக்கு, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக, தலா 8,000 ரூபாய், பயனாளி வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் - ரெட்டிக்குப்பம் முதல், இடைக்கழிநாடு - ஆலம்பரைகுப்பம் வரை மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதார தொழிலாக, கடலில் மீன் பிடிக்கின்றனர்.
வங்கக் கடலில், மீன்வளப் பெருக்கம் கருதி, மீன் இனப்பெருக்கக் காலமான, ஏப்., முதல் ஜூன் வரை, மத்திய அரசு மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. ஏப்., 15 முதல் ஜூன் 15 வரை, தடைக்காலமாக உள்ளது.
ஆழ்கடல் மீன்பிடிக்கே இத்தடை என்றாலும், சாதாரண பைபர் படகில், கரையோரம் மீன் பிடிப்பவர்களும் தடையை கடைப்பிடிக்கின்றனர்.
தமிழக அரசு தடைக்கால நிவாரணமாக, கடந்தாண்டு வரை குடும்பத்திற்கு 5,000 ரூபாய் வீதம் வழங்கியது. நிவாரணத் தொகையை, குடும்பத்திற்கு 8,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
நடப்பாண்டு முதல், இத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டது. மீன்வளத் துறை தடைக்காலம் முடிவடையும் சில நாட்கள் முன், பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு, நடத்தை விதிகள் கருதி, முன்னதாக உத்தரவிடப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, தேர்தலுக்கு ஓரிரு நாட்கள் முன், 8,000 ரூபாய் வீதம் பயனாளி, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், 7,801 பேருக்கு, நிவாரணம் வழங்கியதாகவும், தகுதியுள்ளவர்களுக்கு ஆய்விற்குப் பின் வழங்குவதாகவும், மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

