/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
விதை பண்ணை அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
/
விதை பண்ணை அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு அழைப்பு
ADDED : செப் 14, 2024 09:21 PM
செங்கல்பட்டு:விதை பண்ணை அமைத்து இருமடங்கு லாபம் ஈட்ட ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு விதை மேம்பாட்டு முகமை மூலம், விவசாயிகளின் வயல்களில் விதைப்பண்ணை அமைக்கப்பட்டு, தமிழ்நாடு விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறையின் உதவியுடன், தரமான நெல், ராகி, உளுந்து, நிலக்கடலை மற்றும் எள் விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆண்டுதோறும் சராசரியாக 500 மெட்ரிக் டன் நெல், 1 மெட்ரிக் டன் கேழ்வரகு, 35 மெட்ரிக் டன், உளுந்து 85 மெட்ரிக் டன், நிலக்கடகலை மற்றும் எள் விதைகள் தலா, 1 மெட்ரிக் டன் விதைகள் டான்சிடா மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.
மத்திய - மாநில அரசு திட்டங்களின் கீழ், மானிய விலையில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகள் பயன்பெறும் வகையில், டான்சிடாவின் மூலம், மாநிலம் முழுதும் ஒரே மாதிரியான விலை நிர்ணயித்து, அனைத்து பயிர்களிலும் உள்ளூர் சந்தை விலையை விட கூடுதலாக கொள்முதல் விலை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், அறிவிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட ரகங்களுக்கு கூடுதல் உற்பத்தி மானியமும் வழங்கப்படுவதால், விளைபொருட்களை தானியமாக விற்பனை செய்வதைவிட, தரமான விதை உற்பத்தி செய்து வழங்குவதால், விவசாயிகள் இருமடங்கு லாபம் ஈட்டலாம்.
விதைப்பண்ணை சாகுபடியை ஆதிதிராடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் வகையில், நடப்பாண்டில், நெல் 62.5 ஏக்கர், சிறுதானியங்கள் 1.75 ஏக்கர், பயறு வகைகள் 22.5 ஏக்கர், எண்ணெய் வித்துக்கள் 35 ஏக்கர் பரப்பளவில் அமைக்க இலக்கு நிர்ணியக்கப்பட்டுள்ளது.
இதில் ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண்மைத்துறை உழவன் செயலியை பயன்படுத்தி, விவசாயின் பெயர், கிராமம், வட்டாரம், விதைப்பண்ணை அமைக்க விரும்பும் பயிர், ரகம், பரப்பு, சர்வே எண் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் உதவி விதை அலுவலர்களை அணுகி, பண்ணை அமைத்து பயன்பெறலாம்.
தரமான விதை உற்பத்தி செய்து விற்பதால், விவசாயிகள் இரு மடங்கு லாபம் ஈட்டலாம் என, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் செல்லபாண்டியன் தெரிவித்தார்.