/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிசைக்குள் லாரி புகுந்து பாட்டி, பேரன் காயம்
/
குடிசைக்குள் லாரி புகுந்து பாட்டி, பேரன் காயம்
ADDED : ஆக 23, 2024 07:47 PM
திருநீர்மலை:பம்மலை அடுத்த திருநீர்மலை, திருமங்கையாழ்வார் புரத்தில் கிரஷர்கள் இயங்குகின்றன. வெளி இடங்களில் இருந்து டிப்பர் லாரிகளில் கருங்கற்களை கொண்டு வந்து, கிரஷர்களில் கொட்டி ஜல்லியாக மாற்றுவர்.
அங்குள்ள ஒரு கிரஷரில், நேற்று முன்தினம் இரவு டிப்பர் லாரி ஒன்று கருங்கற்களை ஏற்றி வந்து கொட்டிக் கொண்டிருந்தது. பங்கர் எனப்படும் பள்ளமான பகுதியில் கொட்டப்படும் கற்கள், கண்வெயர் மூலம் சென்று, அரைத்து ஜல்லியாக வெளியே வரும்.
கற்களை கொட்டிக் கொண்டிருந்த லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அங்குள்ள தொழிலாளர்கள் குடிசைக்குள் புகுந்தது. இதில், ஒரு குடிசையின் சுவர் இடிந்து, உள்ளே துாங்கிக் கொண்டிருந்த ஜானகி, 48, அவரது மூன்றரை வயது பேரன் சுஜித் ஆகியோர் லேசான காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு, ஜானகி, சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவன் சுஜித், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லாரி ஓட்டுனர், புதுச்சேரியை சேர்ந்த பிரேம்நாத், 32, என்பவரை கைது செய்து, விசாரிக்கின்றனர்.

