/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் செங்கையில் ரூ.2.37 கோடியில் புதிய கட்டடம் தயார்
/
வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் செங்கையில் ரூ.2.37 கோடியில் புதிய கட்டடம் தயார்
வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் செங்கையில் ரூ.2.37 கோடியில் புதிய கட்டடம் தயார்
வணிக ரீதியான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் செங்கையில் ரூ.2.37 கோடியில் புதிய கட்டடம் தயார்
ADDED : மார் 05, 2025 11:34 PM

செங்கல்பட்டு,செங்கல்பட்டு மாவட்டத்தில், வணிக நீதிமன்றம் மற்றும் வணிக மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைய உள்ளதற்கு கட்டடங்கள் கட்டி, நீதித்துறையிடம், பொதுப்பணித்துறை ஒப்படைத்துள்ளது.
புதிதாக கட்டியுள்ள கட்டடங்களில் வணிக நீதிமன்றங்கள் திறக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், முதன்மை மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், ஆலந்துார் ஆகிய இடங்களில் 45 நீதிமன்றங்கள் உள்ளன.
இவற்றில் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, குற்றவியல் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், நிலப்பிரச்னை மற்றும் வணிக ரீதியான வழக்குகள் என 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னை புறநகரில் உள்ள, செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளில், தனியார் தொழிற்சாலைகள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.
இந்த வழக்குகளை விரைந்து முடிக்க, செங்கல்பட்டில், வணிக நீதிமன்றம் மற்றும் வணிக மேல் முறையீட்டு நீதிமன்றம் அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசுக்கு, வழக்கறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார். செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வணிக நீதிமன்றம், வணிக மேல் முறையீட்டு நீதிமன்றம் அமைக்க, தமிழக அரசு 2020 ம் ஆண்டு நவ., 9ம் தேதி உத்தரவிட்டது.
அதன்பின், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மேற்கண்ட நீதிமன்றங்கள் அமைக்க, நீதித்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் முடிவு செய்தனர்.
இதற்காக பழைய கட்டடத்தில், உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக முதல் தளம் கட்டடம் கட்ட, 2 கோடியே 37 லட்சம் ரூபாய் நிதியை, தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு, ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.
இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம், ஆறு மாதங்களுக்கு முன் பணிகள் துவங்கின. அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டது. புதிய கட்டடத்தை, நீதித்துறையிடம், பொதுப்பணித்துறையினர் ஒப்படைத்தனர்.
வணிக நீதிமன்றம், வணிக மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் திறக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.