/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வாரச்சந்தை; அச்சிறுபாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
/
புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வாரச்சந்தை; அச்சிறுபாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வாரச்சந்தை; அச்சிறுபாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வாரச்சந்தை; அச்சிறுபாக்கத்தில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 07, 2024 07:27 AM

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கத்தில் உள்ள ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இக்கோவிலுக்கு சொந்தமான, 4.5 ஏக்கர் நிலம், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் உள்ளது. இந்த காலி இடத்தில், ஞாயிறுதோறும் வாரச்சந்தை நடக்கிறது.
அச்சிறுபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், தங்கள் விளைநிலங்களில் விளைந்த காய்கறிகள், கீரைகள், கிழங்கு வகைகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றையும், வெளியூர் பகுதி வியாபாரிகளும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.
இங்கு, நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ், சிறிய அளவிலான கடைகளுக்கு 25 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சந்தை வளாகத்தில் இடம் கிடைக்காத வியாபாரிகள், புறவழிச் சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து, வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவர்களிடம், பேரூராட்சி நிர்வாகம் கடைக்கு ஏற்றாற்போல், கட்டணங்களை வசூல் செய்கின்றனர்.
புறவழிச்சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், சந்தை நடைபெறும் நாட்களில், புறவழிச்சாலை வழியாக எலப்பாக்கம், திருமுக்காடு, திம்மாபுரம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களில் சென்றுவர முடியாத சூழ்நிலை உருவாகிறது.
அச்சிறுபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்திகளை கொண்டு செல்ல முடியாத சூழல் உருவாகிறது.
எனவே, வாரச்சந்தை நடைபெறும் நாட்களில், புறவழிச்சாலையை ஆக்கிரமித்து கடை வைக்கும் வியாபாரிகளை ஒழுங்குபடுத்த, பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.