/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு அடாவடி; கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம்
/
லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு அடாவடி; கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம்
லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு அடாவடி; கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம்
லோடு ஏற்றிச்செல்ல பணம் கேட்டு அடாவடி; கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் தேக்கம்
ADDED : மே 05, 2024 11:57 PM

மதுராந்தகம் : செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாகும். குறிப்பாக, வடகிழக்கு பருவ மழை காலத்தில், நெல் சாகுபடி அதிகம் செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பாக, 104 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இதில், மதுராந்தகம் அருகே புதுப்பட்டு ஊராட்சியில், தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதில், விவசாயிகளிடமிருந்து பணம் பெறாமல், இடைத்தரகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தலையீடு இல்லாமல், விவசாயிகளிடமிருந்து அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்கின்றனர்.
இதனால், விவசாயிகள் மத்தியில், புதுப்பட்டு நேரடி நெல் கொள்முதல் நிலையம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இது குறித்து, அப்பகுதி விவசாயி ரா.சகாதேவன், 55, கூறியதாவது:
கோதண்டராமன், பட்டாபி, வெங்கடபெருமாள் உள்ளிட்ட விவசாயிகள் பலர் சேர்ந்து, குழு அமைத்து, நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து பணம் பெற அனுமதி இல்லை என, தீர்மானிக்கப்பட்டது.
அவ்வாறு, விவசாயிகளே ஒன்று சேர்ந்து, நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை, மூட்டை பிடிப்பது மற்றும் லாரிகளில் லோடு ஏற்றும் பணிகளை செய்தனர்.
அவ்வாறு, 80க்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து, 5,500க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.
தற்போது, ஒரு லோடு லாரியில், 700 நெல் மூட்டைகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டதில், மீதமுள்ள 5,000த்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலையத்திலேயே, கடந்த 10 நாட்களாக தேங்கியுள்ளன.
லோடு லாரிகளில், நெல் மூட்டைகள் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றால், நெல் மூட்டை ஒன்றிற்கு, 10 ரூபாய் தர வேண்டும் என, லாரி ஓட்டுனர்கள் கறார் காட்டுகின்றனர். இதனால், நெல் மூட்டைகள் லாரிகளில் லோடு ஏற்றப்படாமல் உள்ளன.
கோடை மழை பெய்யும் சூழ்நிலை உள்ளதால், அரசு அதிகாரிகள், இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.