/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய் துார்வார ரூ.3.42 கோடி ஒதுக்கீடு
/
மழைநீர் கால்வாய் துார்வார ரூ.3.42 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 14, 2024 09:23 PM
செங்கல்பட்டு:மழைநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்கவும், சிறுபாலங்கள் கட்டவும், பொது நிதியில் இருந்து, 3.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட உள்ளன.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே., நகர், நத்தம், மேட்டுத்தெரு, வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அழகேசன் நகர், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மழைநீர் கால்வாய் உள்ளன.
இந்த கால்வாய்களை, துார்வாரி சீரமைக்க வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம், அப்பகுதி வாசிகள் பலமுறை வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து, மழைநீர் கால்வாய்கள் துார்வாரி சீரமைக்க, பொது நிதியில் இருந்து செயல்படுத்த, நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வடகிழக்கு பருவ மழைக்கு முன், நகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தும் தாழ்வான பகுதிகளில், மழைநீர் தேங்காதவாறு பிரதான வடிகால்வாய், ஜே.சி.கே., நகர், களத்துமேடு, பச்சையம்மன் கோவில், அண்ணாநகர், திம்மராஜகுளம், அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட கால்வாய் துார்வாரி சீரமைக்க, பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
இதில், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்ய, பொது நிதியில் இருந்து, 3.42 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை செயல்படுத்த, கடந்த 10ம் தேதி டெண்டர் விடப்பட்டது.
இதுகுறித்து, நகராட்சி பொறியாளர்கள் கூறியதாவது:
நகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய், சிறுபாலம், திறந்தவெளி கிணறு பகுதியில் சுற்றுச்சுவர், கான்கிரீட் சாலைகள், மழைநீர் வடிகால் ஆகிய பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.