/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பிளாஸ்டிக் சேகரிப்பு கோவில்களில் விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் சேகரிப்பு கோவில்களில் விழிப்புணர்வு
ADDED : பிப் 22, 2025 12:45 AM
மாமல்லபுரம், ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களால், இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. அத்தகைய பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு, தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில், மாநிலம் முழுதும் உள்ளாட்சிப் பகுதிகளில், நான்காம் சனிக்கிழமையில் பொதுமக்களை ஈடுபடுத்தி, ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது, அதன் தீமையை விளக்கி, மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தீவிர பிளாஸ்டிக் சேகரிப்பில் ஈடுபடவும் தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்ற அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், தீவிர பிளாஸ்டிக் சேகரிப்பு முகாம் நடத்த, மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியது. இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட 99 கோவில்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள், இன்று பிளாஸ்டிக் சேகரித்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன.
திருப்போரூர் கந்தசாமி கோவிலில், மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் இதை துவக்குகிறார். மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், இன்று பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது.
மேலும், செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் அரசு மருத்துவக் கல்லுாரி, நெம்மேலி அரசு கலை, அறிவியல் கல்லுாரி ஆகியவற்றிலும் பிளாஸ்டிக் சேகரித்து, பள்ளிகளில் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

