/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பரனுார் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி
/
பரனுார் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி
பரனுார் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி
பரனுார் சுங்கச்சாவடி சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவதி
ADDED : ஆக 06, 2024 02:33 AM

மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த பரனுார் பகுதியில், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்களும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் வாகனங்களும், இந்த சுங்கச்சாவடியை கடந்து தான் செல்ல வேண்டும்.
இந்த சுங்கச்சாவடியை ஒட்டி, சாலையின் இருபுறமும் இளநீர் கடை, டீ கடை, பாஸ்ட்டேக் பதிவு உள்ளிட்ட கடைகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலையில் வரும் வாகன ஓட்டிகள், சாலை ஓரத்திலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, கடைகளுக்கு சென்று விடுகின்றனர்.
இரவு நேரங்களில், இந்த பகுதி இருள் சூழ்ந்து உள்ளதால், சக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
நெடுஞ்சாலையை ஓட்டி, இருபுறமும் 500 மீட்டர் துாரம் வரை கடைகள் உள்ளதால், வழி நெடுகிலும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
வாகன ஓட்டிகள் கடைக்கு சென்று வந்து, மீண்டும் வாகனங்களை எடுக்கும் வரை, நெடுஞ்சாலையில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
சாலை நடுவே செல்லும் வாகனங்கள், கடைகளை கண்டதும் உடனடியாக திரும்புவதால், அடிக்கடி வாகன ஓட்டிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அப்பகுதியில் போக்குவரத்து முடங்குகிறது.
தற்போது, இந்தபகுதியில் சாலை பணிகளுக்காக, பழைய சாலை அகற்றப்பட்டு உள்ளதால், வாகனங்களை இயக்க சவாலாக உள்ளது. இதில், கூடுதல் சவாலாக சாலை ஓரம் நிறுத்தப்படும் வாகனங்களும் உள்ளன.
எனவே, இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்த போலீசார் தடை விதிக்க வேண்டும்.
மேலும், இந்த பகுதியில் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.