/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில்களில் சீட்டாடும் கும்பல் அடாவடி; இடமின்றி நெரிசலில் பயணியர் அவதி
/
ரயில்களில் சீட்டாடும் கும்பல் அடாவடி; இடமின்றி நெரிசலில் பயணியர் அவதி
ரயில்களில் சீட்டாடும் கும்பல் அடாவடி; இடமின்றி நெரிசலில் பயணியர் அவதி
ரயில்களில் சீட்டாடும் கும்பல் அடாவடி; இடமின்றி நெரிசலில் பயணியர் அவதி
ADDED : ஆக 27, 2024 01:07 AM

மறைமலை நகர் : செங்கல்பட்டு - சென்னை கடற்கரை தடத்தில், தினமும் 30 புறநகர் மின்சார ரயில்கள் சென்று வருகின்றன. அவற்றில், செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளைச் சேர்ந்தோர் சென்று வருகின்றனர்.
சுற்றியுள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பெண்கள், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.
இந்த ரயில்களில், செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் செல்லும் வரை, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் கூட்டம் அலைமோதும். பயணியர் நிற்க இடமின்றி நெரிசலில் சிக்கித் தவிப்பது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பிட்ட பெட்டிகளில் தினமும் ஏறிச்செல்லும் பயணியர், நாளடைவில் நண்பர்களாக மாறி, ஒருவருக்கு ஒருவர் இடம் பிடிப்பது போன்ற உதவிகளும் செய்து கொள்வது வழக்கம்.
அவ்வாறு இடம் பிடித்து வைத்துக்கொள்ளும் நண்பர்கள், வட்டமாக அமர்ந்து ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தில் ஈடுபடுவதால், பிற பயணியர் செய்வதறியாது தவிக்கின்றனர்.
இது குறித்து சக பயணியர் கூறியதாவது:
காலை நேரத்தில், ரயில்களில் நிற்கக் கூட இடம் இருக்காது. செங்கல்பட்டு அல்லது சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் ஏறும் பயணியர் சிலர், ரயில் பெட்டிகளில் அமர்ந்து சீட்டு விளையாடியபடி வருகின்றனர்.
இதன் காரணமாக, அருகில் காலியாக உள்ள இருக்கைகளில் கூட மற்ற பயணியர் அமர முடிவதில்லை. கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதிகளில், மற்ற பயணியர் நிற்க இடமின்றி, படியில் தொங்கியபடியே பயணிக்கின்றனர்.
இது, அனைத்து மின்சார ரயில்களிலும் தொடர்கதையாக உள்ளது. எனவே, ரயில் பெட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மீது, ரயில்வே போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.