/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
/
பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
பார்முலா - 4 கார் பந்தயத்துக்கு தடை கோரி ஐகோர்ட்டில் வழக்கு
ADDED : ஆக 28, 2024 01:20 AM

சென்னை, சென்னையில் நடக்க உள்ள 'பார்முலா - 4' கார் பந்தயத்துக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்தில், தமிழக பா.ஜ., நிர்வாகி வழக்கு தொடர்ந்துள்ளார். இம் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக அரசின் சார்பில், சென்னையில் பார்முலா- 4 கார் பந்தயம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த பிப்ரவரியில், சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது.
பந்தயம் நடத்த திட்டமிட்டுள்ள சாலையில் மருத்துவமனைகள் இருப்பதால், ஒலி மாசு ஏற்படாமல் தடுக்க வேண்டுமென்றும் உத்தரவில் கூறப்பட்டது.
பாதுகாப்பு சாதனங்கள்
இதை எதிர்த்து, அ.தி.மு.க., உட்பட பலர் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், இந்த மனு குறித்து நேற்று குறிப்பிடப்பட்டு, அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
இதை ஏற்காத அமர்வு, இந்த விவகாரம் அவசரமாக விசாரிக்க வேண்டிய வழக்கல்ல என தெரிவித்தது.
தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரசாத், தாக்கல் செய்த மனு:
சென்னையில் பார்முலா - 4 கார் பந்தயம், வரும் 31, 1 ம் தேதிகளில் நடக்க உள்ளது. பொது சாலையில் நடக்கும் இந்தப் பந்தயத்துக்கு, மாநில அரசு அனுமதி வழங்கியிருக்கக் கூடாது.
பொது சாலையில் பந்தயம் நடக்க பந்தய கார்களுக்கு அனுமதி வழங்கினால், மோட்டார் வாகன சட்டத்தின் விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பந்தய கார்களில் சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
பந்தயம் நடத்துவதற்காக, தற்காலிகமாக சாலையை மூடுவதற்கு அனுமதி வழங்க, மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. பந்தயம் நடத்த மாநகராட்சி அனுமதி வழங்குவது, சென்னை நகர முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டத்துக்கு முரணானது.
பொது மக்களின் நலன்களை காக்க வேண்டிய பொறுப்பு, அரசுக்கு உள்ளது. ஆனால், பந்தயம் நடத்தும் நிறுவனத்துடன் அரசும் கை கோர்த்து உள்ளது.
பந்தயம் நடக்கும் போது, அண்ணாசாலை, சிவானந்தசாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், போக்குவரத்து பாதிக்கப்படும்.
இந்தப் பந்தயத்தை மாநில அரசு நடத்துகிறதா அல்லது தனியார் நிறுவனம் நடத்துகிறதா என்பதை, விளையாட்டுத்துறை அமைச்சர் வெளிப்படையாக கூறவில்லை.
ஆனால், பந்தயம் சுமுகமாக நடப்பதை உறுதி செய்யும்படி, தலைமைச் செயலர் மற்றும் இதர துறை செயலர்களை, அவர் கேட்டு கொண்டுள்ளார்.
எதிர்பார்ப்பு
கார் பந்தயம் நடத்துவது அரசின் வேலை அல்ல; இதை கண்காணிப்பதற்கு, அரசுத்துறை செயலர்களுக்கு அதிகாரம் இல்லை.பந்தயப் பாதையானது, ஓட்டுவதற்கு தகுதியற்றதாக உள்ளது. இதில் பந்தயம் நடத்த எப்படி அனுமதி அளித்தனர் என்பது வியப்பாக உள்ளது.
பந்தயத்தை நடத்த, அரசு அவசரகதியில் நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, கார் பந்தயத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இம்மனு, இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.