/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சியை உலுக்கிய குற்ற சம்பவங்கள் தீர்ப்பு கிடைக்காமல் வழக்குகள் நிலுவை
/
காஞ்சியை உலுக்கிய குற்ற சம்பவங்கள் தீர்ப்பு கிடைக்காமல் வழக்குகள் நிலுவை
காஞ்சியை உலுக்கிய குற்ற சம்பவங்கள் தீர்ப்பு கிடைக்காமல் வழக்குகள் நிலுவை
காஞ்சியை உலுக்கிய குற்ற சம்பவங்கள் தீர்ப்பு கிடைக்காமல் வழக்குகள் நிலுவை
ADDED : மே 24, 2024 10:34 PM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விபத்து, கொள்ளை, கொலை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, அடிதடி, தனிமனித தாக்குதல், வழிப்பறி என, பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
இதில், குறிப்பிடும்படியான சில குற்ற வழக்குகள், மக்களால் அதிகம் பேசப்பட்டன. அவ்வாறான முக்கிய சம்பவங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை, பல்வேறு கட்டங்களில் உள்ளது. சில வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. சில வழக்குகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமலும், நீதிமன்ற விசாரணை துவக்கப்படாமலும் உள்ளன.
காஞ்சிபுரத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் வழக்கு நிலவரம்:
காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில், 2021 செப்., மாதத்தில், 20 வயது இளம்பெண்ணை வேலை வாங்கி தருவதாகவும், பண உதவி செய்வதாகவும் அழைத்து சென்று, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குணசீலன், ஜெபநேசன், காமராஜ் உள்ளிட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருகின்றனர். இந்தாண்டு தீர்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் அருகேயுள்ள தேவரியம்பாக்கம் கிராமத்தில், ஊராட்சி தலைவர் அஜய் சகோதரர் நடத்திய காஸ் கிடங்கு, 2022 அக்டோபர் மாதம் வெடித்து சிதறியது.
இதில், அவரது சகோதரர் குடும்பம், ஊழியர்கள் என, 11 பேர் இறந்தனர். இந்த வழக்கில், ஊராட்சி தலைவர் அஜய் உள்ளிட்டோர் ஒரகடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில், இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. காஸ் கிடங்கு தீ விபத்து பற்றிய தடய அறிவியல் ஆய்வக முடிவுகளை எதிர்பார்ப்பதாகவும், அந்த அறிக்கை கிடைத்தவுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எஸ்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவனும், மாணவியும், காஞ்சிபுரம் அருகேயுள்ள குண்டுகுளம் பகுதியில், 2023 ஜனவரி மாதம், தனியாக பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கே வந்த இளைஞர்கள், கல்லுாரி மாணவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அங்கேயே கல்லுாரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கில் விமல்குமார், தமிழரசன், சிவகுமார், தென்னரசு உள்ளிட்ட, 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில், கடந்தாண்டு ஜூலை மாதம், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், மூன்று பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், வெடி தயாரிக்கும் இடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில், தொழிலாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இதில், மாகரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடி ஆலையின் உரிமையாளர் நரேந்திரனை கைது செய்தனர்.
இந்த வழக்கில், கடந்தாண்டு அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கும் நீதிமன்ற விசாரணையில் உள்ளது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, கடந்த 2015ல் உற்சவர் சிலை செய்ததில், 8.7 கிலோ தங்க மோசடி செய்ததாக, சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர்.
மீண்டும் சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்து, கடந்தாண்டு இறுதியில் ஸ்தபதி முத்தய்யா, அர்ச்சகர் ராஜப்பா உள்ளிட்ட 10 பேர் மீது, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில், கடந்தாண்டு இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆனால், விசாரணை இன்னும் துவங்கவில்லை.
- -நமது நிருபர் --

