/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க மத்திய நிதித்துறை ஒப்புதல்
/
கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க மத்திய நிதித்துறை ஒப்புதல்
கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க மத்திய நிதித்துறை ஒப்புதல்
கூடுதலாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க மத்திய நிதித்துறை ஒப்புதல்
ADDED : ஆக 11, 2024 05:37 AM
சென்னை : சென்னையில் ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களை இயக்க, 28 ரயில்களை கொள்முதல் செய்ய, மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னையில் தற்போது தலா நான்கு பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள், இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்படுகின்றன.
மெட்ரோ ரயில்களில் தினமும் மூன்று லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். தினசரி நெரிசல் மிகுந்த நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும், பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இரு வழித்தடங்களில் பயணியர் வசதிக்காக, கூடுதலாக ஆறு பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டு, அறிக்கையும் தயாரிக்கப்பட்டது.
இந்த கருத்துருவுக்கு தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தது.
மெட்ரோ ரயில் முதல் கட்டத்தின் கட்டமைப்பு முழுவதையும் இயக்குவதற்காகவும், 2028ல் உத்தேச பயணியர் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் கூடுதல் தேவைப்படும் ரயில் பெட்டிகளை கணக்கீட்டு, 2,820.90 கோடி ரூபாய் மதிப்பில் ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை கொள்முதல் செய்யப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ ரயில்களில் வரும் ஆண்டுகளில் பயணியரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், ஆறு பெட்டிகள் அல்லது கூடுதல் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, 28 கூடுதல் மெட்ரோ ரயில்களை வாங்க, இரண்டு மாதங்களுக்கு முன் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்தது. தற்போது, மத்திய நிதி மற்றும் பொருளாதார விவகாரத் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், புதியதாக 28 மெட்ரோ ரயில்கள் வாங்க கடன் வசதிக்கு வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை தயாரித்து பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.