/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காஞ்சி மேயருக்கு காத்திருக்கும் சவால்; ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு
/
காஞ்சி மேயருக்கு காத்திருக்கும் சவால்; ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு
காஞ்சி மேயருக்கு காத்திருக்கும் சவால்; ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு
காஞ்சி மேயருக்கு காத்திருக்கும் சவால்; ஒரு வாரத்திற்குள் கூட்டம் நடத்த ஏற்பாடு
ADDED : ஜூலை 31, 2024 11:44 PM

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில், தி.மு.க., மேயர் மகாலட்சுமிக்கு எதிராக, துணை மேயர் குமரகுருநாதன் உட்பட தி.மு.க.,- - அ.தி.மு.க., - -பா.ம.க., - -சுயேச்சை, - பா.ஜ., என, அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
மேயர் மகாலட்சுமி மற்றும் அவரது கணவர் யுவராஜ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். மொத்தமுள்ள, 51 கவுன்சிலர்களில், மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கேட்டு, 33 கவுன்சிலர்கள் கடந்த ஜூன் மாதம் மனு அளித்தனர்.
மாமன்ற கூட்டம்
அதன் அடிப்படையில், ஜூலை 29ல், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டம் மற்றும் ஓட்டெடுப்பு நடத்த கமிஷனர் செந்தில்முருகன் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், 29ம் தேதி நடந்த கூட்டத்திற்கு, ஒரு கவுன்சிலர் கூட கூட்டத்திற்கு வராமல், 'ஆப்சென்ட்' ஆகினர்.
இதனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இதனால், மேயர் பதவியில் மகாலட்சுமி தொடர்கிறார்.
'கட்சியின் தலைமை அறிவுறுத்தியதால், நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு வரவில்லை' என, தி.மு.க., கவுன்சிலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாநகராட்சியில், சில மாதங்களாகவே மேயர் மற்றும் கவுன்சிலர் பிரச்னை தொடர்ந்ததால், மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகள் முடங்கியிருந்தன.
கடந்த டிசம்பர் மாதத்திற்கு பின் மாமன்ற கூட்டம் நடக்காததால், பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்ய முடியாத நிலை நீடிக்கிறது.
எனவே, அடுத்த ஒரு வாரத்திற்குள், மாநகராட்சி கூட்டத்தை நடத்த மேயர் மகாலட்சுமி மற்றும் கமிஷனர் செந்தில்முருகன் ஆகியோர் ஏற்பாடு செய்கின்றனர். இதில், 100க்கும் மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், மாநகராட்சி கூட்டம் பிரச்னையின்றியும், போதிய கவுன்சிலர்களுடன் நடத்துவது, மேயர் மகாலட்சுமிக்கு சவாலாக பார்க்கப்படுகிறது.
கவுன்சிலர்கள் ஆதரவு
அதாவது, எதிர்தரப்பு கவுன்சிலர்கள் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்தாலும், கூட்டத்தை முழுமையாக நடத்தி, தீர்மானங்களை நிறைவேற்ற, 3ல் 1 பங்கு கவுன்சிலர்கள் தேவை. அதாவது, 51 கவுன்சிலர்களில், 17 கவுன்சிலர்கள் தேவை.
தற்போதைய சூழலில், மேயர் தரப்புக்கு 13 கவுன்சிலர்கள் ஆதரவாக இருந்தாலும், மேலும் நான்கு கவுன்சிலர்கள் ஆதரவு தேவைப்படுகிறது.
இதனால், தி.மு.க., - சுயேச்சை உள்ளிட்ட சில கவுன்சிலர்களிடம், மேயர் தரப்பு ஆதரவு கேட்டு வருகிறது.