/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதல்வர் மருந்தகம் மானாமதியில் திறப்பு
/
முதல்வர் மருந்தகம் மானாமதியில் திறப்பு
ADDED : பிப் 24, 2025 11:27 PM
திருப்போரூர், தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அதில் ஒரு பகுதியாக செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாமதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், முதல்வர் மருந்தகம் திறப்பு விழா, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று,'ரிப்பன்' வெட்டி குத்து விளக்கை ஏற்றி, மருந்தகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு கூட்டுறவுத்துறை சார்பில் 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விவசாய கடன், கால்நடை பராமரிப்பு கடன், மகளிர் சுய உதவிக்கடன், சிறு வணிக கடன் ஆகியவற்றிற்கான காசோலையை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராத விவகாரத்தால் திருப்போரூர் அடுத்த இள்ளலுார் பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சரண்யா என்ற மாணவி, தான் சேர்த்து வைத்திருந்த சிறுசேமிப்பு தொகை 12,000 ரூபாய்க்கான காசோலையை, தமிழக அரசு கல்வி செலவிற்காக வழங்கினார்.
அந்த மாணவிக்கு, அமைச்சர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், திருப்போரூர் எம்.எல்.ஏ., பாலாஜி, செங்கல்பட்டு சப் -- கலெக்டர் நாராயணசர்மா, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், நெல்லிக்குப்பம் ஊராட்சியில், தி.மு.க., காஞ்சி வடக்கு மாவட்ட பிரதிநிதி கெஜராஜன் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தார்.

