/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை கூர்நோக்கு இல்லத்தில் சிறார்களுக்கு இடையே மோதல்
/
செங்கை கூர்நோக்கு இல்லத்தில் சிறார்களுக்கு இடையே மோதல்
செங்கை கூர்நோக்கு இல்லத்தில் சிறார்களுக்கு இடையே மோதல்
செங்கை கூர்நோக்கு இல்லத்தில் சிறார்களுக்கு இடையே மோதல்
ADDED : மே 02, 2024 01:30 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் இயங்கி வரும் அரசு கூர்நோக்கு இல்லத்தில், சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், குற்ற செயல்களில் ஈடுபட்ட 37 சிறார்கள் உள்ளனர். இவர்களுக்கு, நிர்வாகம் சார்பில் படிப்பு மற்றும் தொழிற்பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன.
இங்கு, சிறப்பு பிரிவு சிறார்கள் 25 பேர் தனி கட்டடத்திலும், மற்றொரு பிரிவினர் 12 பேர் தனி கட்டடத்திலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த இரண்டு பிரிவினருக்கும், அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், ஒன்பது சிறார்கள் கட்டடத்தின் மேல்தளத்தில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நேற்று காலை மாதாந்திர மருத்துவ பரிசோதனைக்காக, சிறுவர்கள் அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்கள் போன்ற பொருட்களால் தாக்கிக் கொண்டனர். காவலர்கள் வந்ததும், அறையில் இருந்த மின் விசிறி, ஜன்னல் கதவுகள் உள்ளிட்டவற்றை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
தகவலறிந்து போலீசார் வருவதை கண்ட சிறார்கள், சிறப்பு அறையில் புகுந்து, உட்புறமாக தாழிட்டுக்கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு சப் - கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தியும் சிறார்கள் கேட்காததால், கட்டடத்தின் கூரையில் துளையிட்டு, அதிரடியாக உள்ளே சென்ற போலீசார், சிறார்களை மீட்டு, அவரவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர் உள்ளனரா என, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

