/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி மின்சார பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவு மின் வாரிய அதிகாரிகளிடம் கலெக்டர் அதிரடி
/
கூடுவாஞ்சேரி மின்சார பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவு மின் வாரிய அதிகாரிகளிடம் கலெக்டர் அதிரடி
கூடுவாஞ்சேரி மின்சார பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவு மின் வாரிய அதிகாரிகளிடம் கலெக்டர் அதிரடி
கூடுவாஞ்சேரி மின்சார பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவு மின் வாரிய அதிகாரிகளிடம் கலெக்டர் அதிரடி
ADDED : ஜூன் 25, 2024 06:41 AM

செங்கல்பட்டு, : நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதிக்கு, மின்சாரம் சீராக வழங்க, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, மின் வாரிய அதிகாரிகளுக்கு, கலெக்டர் அருண்ராஜ், நேற்று உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் நரேந்தின், அறிவுடைநம்பி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, கல்விக் கடன் முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம் உள்ளிட்ட 485 மனுக்கள் வரப்பெற்றன.
இந்த மனுக்களை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார். நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி தலைவர் கார்த்திக் மற்றும் கவுன்சிலர்கள், கலெக்டரிடம் அளித்த மனு விபரம்:
நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சியில், 1950ம் ஆண்டு, 33 கேவி திறன் கொண்ட துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது.
இந்நகராட்சி சென்னைக்கு அருகில் உள்ளதால், மக்கள் குடியேற்றம் அதிகரித்து, குடியிருப்புகளும் அதிகரித்து வருகின்றன.
மின் தடை அடிக்கடி ஏற்படுவதால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
குடியிருப்பு அதிகரித்து வருவதால், 33 கேவி திறனில் இருந்து, 110 கேவி திறன் கொண்டதாக தரம் உயர்த்தி தர வேண்டும்.
இந்நகராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில், 110 கேவி திறன் கொண்ட ஒரு துணை மின் நிலையம் அமைக்க, தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், நேற்று முன்தினம் மின்தடை ஏற்பட்டதால், மக்கள் போராட்டம் நடத்தியதாகவும் கவுன்சிலர்கள் கூறினர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர் அருண்ராஜ், நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி பகுதியில் நிலவும் மின்சார பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மின் வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, கூடுதல் ஆசிரியர் பணியிடம், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்துதர வேண்டும் என, பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மனு அளித்தனர்.
முதன்மை கல்வி அலுவலருக்கு அந்த மனுவை பரிந்துரை செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திருப்போரூர் பகுதிகளில் உள்ள தனியார் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள், காலவாக்கம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுநீர் விடுவதற்கு அனுமதி கோரி மனு அளித்தனர்.
மனுவில் கூறியிருப்பதாவது:
ஏகாட்டூர், கழிப்பட்டூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில், கழிவுநீர் லாரிகள் வாயிலாக கழிவுநீரை அப்புறப்படுத்தி, மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.
தற்போது, காலவாக்கத்தில் அமைந்துள்ள அரசு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், தனியார் லாரிகள் வாயிலாக எடுக்கப்படும் கழிவுநீரை, கட்டணம் பெற்று, விடுவதற்கான அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.