/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரயில்வே நிர்வாகத்துக்கு கலெக்டர் கண்டிப்பு கொளவாய் ஏரி மூடுகால்வாய் பணியை முடிக்க உத்தரவு
/
ரயில்வே நிர்வாகத்துக்கு கலெக்டர் கண்டிப்பு கொளவாய் ஏரி மூடுகால்வாய் பணியை முடிக்க உத்தரவு
ரயில்வே நிர்வாகத்துக்கு கலெக்டர் கண்டிப்பு கொளவாய் ஏரி மூடுகால்வாய் பணியை முடிக்க உத்தரவு
ரயில்வே நிர்வாகத்துக்கு கலெக்டர் கண்டிப்பு கொளவாய் ஏரி மூடுகால்வாய் பணியை முடிக்க உத்தரவு
ADDED : ஆக 09, 2024 01:49 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு கொளவாய் ஏரி, நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு, குண்டூர் ஏரி மற்றும் சுற்றுப்புற ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், இங்கு வந்தடையும் வகையில் நீர்வரத்து கால்வாய்கள் உள்ளன.
ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், நீஞ்சல்மடுவு கால்வாய் வழியாக, பொன்விளைந்தகளத்துார் ஏரியை சென்றடையும்.
செங்கல்பட்டு நகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஏரியில் விடப்படுகிறது. இதனால், ஏரி நீரை குடிநீருக்கு பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
இதைத்தொடர்ந்து, துார்வாரி ஆழப்படுத்தவும், படகு குழாம் மற்றும் பூங்காக்கள் அடங்கிய பொழுது போக்கு அம்சங்களுடன் ஏரியை புனரமைக்கவும், 2020ம் ஆண்டு டிச., 16ம் தேதி, 60 கோடி ரூபாய் ஒதுக்கி, நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், ஏரியை ஆழப்படுத்தி புறக்கரை அமைத்து, புறக்கரை நிலங்களை உயர்த்தி, 476 மி.க., அடி கொள்ளளவிலிருந்து 650 மி.க., அடி உயர்த்துதல், ஏரியின் கரையை பலப்படுத்துதல், அணுகு சாலை மற்றும் நடைமேம்பாலம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடக்க உள்ளன.
ஏரியில் துார் வாரிய மண்ணை கொட்டி, மூன்று திட்டுக்கள், தீவுகள் அமைத்து, பூங்கா, சுற்றுச்சூழல் மேம்பாட்டு பணிகள், சுற்றுலா பயன்பாட்டு கட்டடங்கள், வாகன நிறுத்த இடம் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.
இப்பணிகளுக்கு, 2021ம் ஆண்டு செப்., மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கின.
இதற்கிடையில், ஏரியின் கலங்கலில், தண்ணீரை வெளியேற்றும் பகுதியில், ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதனால், தண்ணீரை வெளியேற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
அதன்பின், ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்ற, ரயில்வே நிர்வாகத்திற்கு பாலத்தின் வழியாக மூடு கால்வாய் அமைப்பதற்கு, 2023 ஆண்டு செப்., மாதம் 2.25 கோடி ரூபாய் நிதியை, பொதுப்பணித் துறையினர் வழங்கினர்.
ஆனால், பணி துவக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நம் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. அதன்பின், கலெக்டர் அருண்ராஜ், ஏரியை நேற்று ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கு பின், ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றி, மூடு கால்வாய் அமைக்கும் பணியை, ரயில்வே துறை அதிகாரிகள் விரைந்து துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
ஆய்வின்போது, செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் மகேந்திரகுமார், உதவி பொறியாளர் அம்பலவாணன், ரயில்வே உதவி இயக்குனர் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.