/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி மந்தம்
/
புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணி மந்தம்
ADDED : ஜூன் 29, 2024 11:51 PM

மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.
சித்தாமூர், பவுஞ்சூர், சூணாம்பேடு, அச்சிறுபாக்கம் ஒரத்தி, வேடந்தாங்கல், பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற நகர பகுதிகளுக்கு பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியர் மற்றும் வெளியூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்வோர் என, தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், பேருந்து நிலையம் பழமையானதால், மழைக்காலங்களில் நீர் கசிவு ஏற்பட்டு, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக, 2.10 ஏக்கர் பரப்பளவில் இருந்த பழைய பேருந்து நிலையம் இடித்து அப் புறப்படுத்தப்பட்டு, மீண்டும் அதே பகுதியில், புதிதாக பேருந்து நிலையம் அமைப்பதற்காக, கலைஞர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் பூமி பூஜையுடன் துவங்கி நடைபெற்றது. இந்நிலையில், ஐந்து மாதங்கள் ஆன நிலையில், 20 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி பொறியாளர் கூறியதாவது:
மதுராந்தகம் நகராட்சியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 20 சதவீதம் நடந்து முடிந்துள்ளது.
வரும், அக்டோபர் மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினர்.