/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல் சுமந்த மாணவர்கள் அரசு பள்ளியில் சர்ச்சை
/
செங்கல் சுமந்த மாணவர்கள் அரசு பள்ளியில் சர்ச்சை
ADDED : மார் 10, 2025 11:37 PM

திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், செங்கல் சுமக்க வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருநின்றவூர் அடுத்த கொட்டாம்பேடு பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, 160 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், கம்பி வேலி அமைக்கும் பணி நடக்கிறது.
கடந்த 8ம் தேதி, மாணவர்கள் சிலர், வளாகத்தில் இருந்து பள்ளி கட்டடத்திற்கு உள்ளே செங்கற்களை எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது.
இது குறித்து, பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:
பள்ளியில் மாணவர்களுக்கு செங்கல் சுமக்கும் வேலை ஏதும் தரப்படவில்லை.
உடற்பயிற்சி வகுப்பு நேரத்தில், மாணவர்கள் விருப்பப்பட்டு, சில வேலைகள் செய்கின்றனர்.மற்றபடி, மாணவர்களை வேலை செய்ய சொல்லி, நாங்கள் வற்புறுத்தவில்லை.
தற்போது, பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், பள்ளியின் வளாகம் வழியாக சென்று வரும், பக்கத்துக்கு வீட்டுக்காரர் ஒருவர் காழ்ப்புணர்ச்சியால், அவதுாறு பரப்பும் விதமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது தொடர்பாக, திருநின்றவூர் போலீசார்விசாரிக்கின்றனர்.