/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையை ஆக்கிரமிக்கும் கனரக லாரிகளால் ஆபத்து
/
சாலையை ஆக்கிரமிக்கும் கனரக லாரிகளால் ஆபத்து
ADDED : ஆக 26, 2024 02:09 AM

மேடவாக்கம்:பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில் இருந்து மடிப்பாக்கம் நோக்கி செல்லும் சாலையில், மெட்ரோ ரயில் விரிவாக்க பணிகள் நடக்கின்றன. இதனால் சாலையின் அகலம் பாதியாக குறைந்துள்ளது. சில இடங்களில், ஒரு வழிப்பாதையாகவும் மாற்றப்பட்டுள்ளது.
இந்த வழித்தடத்தில் உள்ள நன்மங்கலம், கோவிலம்பாக்கம் உள்ளிட்ட பகுதியில், 20க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் சில அரசு பள்ளிகள் உள்ளன. இதனால், 'பீக் ஹவர்' வேளைகளில், வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும்.
கடந்த சில வாரங்களாக, இந்த வழித்தடத்தில் உள்ள வெள்ளக்கல் அருகே சாலையோரம், தனியார் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், சாலையின் அகலம் குறுகலாகி, விபத்து அச்சத்துடன் வாகன ஓட்டிகள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர் தினகரன், 44, கூறியதாவது:
மெட்ரோ ரயில் விரிவாக்க கட்டுமானங்கள் நடப்பதால், சாலையின் அகலம் பாதியாக குறைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த சாலையை, தனியார் வாகனங்கள் தங்களுக்கான 'பார்க்கிங்' பகுதியாக பயன்படுத்த துவங்கி உள்ளன. இதனால், பொது போக்குவரத்திற்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.
தவிர, இரவு நேரத்தில் வெளிச்சம் பற்றாக்குறை காரணமாக, வாகன ஓட்டிகள், சாலையின் ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகள் மீது மோதி விபத்துகளை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, பொது போக்குவரத்துக்கு இடையூறாகவும், விபத்துகளை ஏற்படுத்தும் விதமாகவும், சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

