/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்தான சாலை வளைவு இள்ளலுாரில் விபத்து அபாயம்
/
ஆபத்தான சாலை வளைவு இள்ளலுாரில் விபத்து அபாயம்
ADDED : ஜூலை 16, 2024 04:33 AM

திருப்போரூர் : திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில், இள்ளலுார், காட்டூர், அம்மாப்பேட்டை, நெல்லிக்குப்பம், கல்வாய், குமிழி, பாண்டூர், காயரம்பேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
ஓ.எம்.ஆர்., சாலையையும், ஜி.எஸ்.டி., சாலையையும் இணைக்கும் இந்த சாலையை, பல்வேறு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக, கிராமப்புறங்களாக இருந்த பகுதிகள் முழுதும், விவசாயம் கைவிடப்பட்டு, தற்போது வீட்டு மனைகளாகவும், அடுக்குமாடி குடியிருப்புகளாகவும் மாற்றம் பெற்று வருகின்றன.
மேலும், இள்ளலுார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் வாயிலாக குடிநீர் எடுத்துச் செல்லப்படுகிறது.
இச்சாலையில், இள்ளலுாரில் அபாயகரமான வளைவு உள்ளது. குறுகிய நிலையில், மின்விளக்கு வசதி இல்லாததால், வளைவுப் பகுதிகளில் விபத்து அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
சில மாதங்களுக்கு முன், இச்சாலையில் பயணித்த வாலிபர் ஒருவர், வளைவு பகுதி இருப்பது அறியாமல் பைக் விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
எனவே, ஆபத்தான வளைவு பகுதியில், வேகத்தடை மற்றும் எச்சரிக்கை பலகை வைத்து, விபத்து ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.