/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாமல்லை செயல் அலுவலர் பொறுப்பேற்பதில் தாமதம்
/
மாமல்லை செயல் அலுவலர் பொறுப்பேற்பதில் தாமதம்
ADDED : ஆக 16, 2024 10:49 PM
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றிய கணேஷ், கடந்த மே மாதம் இறுதியில் ஓய்வு பெற்றார். இதையடுத்து, கருங்குழி செயல் அலுவலர் அருள்குமார், ஏற்கனவே அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கும் கூடுதல் பொறுப்பில் பணியாற்றிவரும் நிலையில், மாமல்லபுரத்திற்கும் கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திருச்சி மாவட்டம், ச.கண்ணனுார் பேரூராட்சி செயல் அலுவலர் சந்திரகுமாரை, மாமல்லபுரத்திற்கு நியமித்து உத்தரவிடப்பட்டது. அவரை நியமித்து ஒரு மாதம் கடந்தும், தற்போது வரை அவர் பொறுப்பேற்கவில்லை.
செயல் அலுவலராக பணியிடம் மாற்றப்படுவோர், உத்தரவிடப்பட்ட சில நாட்களில், புதிய இடத்தில் பொறுப்பேற்பர். மாமல்லபுரம் நகராட்சியாக தரம் உயர்த்த அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனால், செயல் அலுவலர் பணியிடம் நீக்கப்பட்டு, நகராட்சி கமிஷனர் பணியிடம் உருவாக்கப்பட்டு, நகராட்சி கமிஷனர் நியமிக்கப்படுவார்.
அதனால், தற்போது செயல் அலுவலராக இருப்பவர், சில மாதங்களில் வேறிடம் மாற்றப்படுவது உறுதி. அதனாலேயே, செயல் அலுவலராக நியமிக்கப்பட்டவர், பொறுப்பேற்கவில்லை என்றும், அதனால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.