/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் இடத்தில் கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
/
கோவில் இடத்தில் கட்டிய கட்டடம் இடித்து அகற்றம்
ADDED : மே 18, 2024 12:33 AM

ஆலந்துார்:திருவேட்டீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமாக ஆலந்துாரில் உள்ள இடத்தில், ஆக்கிரமிப்பாளர் புதிதாக கட்டிய கட்டடத்தை, அறநிலையத்துறை இடித்து அகற்றியது.
சென்னை, திருவல்லிக்கேணி, திருவேட்டீஸ்வரன்பேட்டையில், திருவேட்டீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்குச் சொந்தமான சொத்து ஆலந்துார், திருவள்ளுவர் நகரில், 5,6,7 ஆகிய தெருக்களில், சர்வே எண் 20/2ல் அமைந்துள்ளது.
இதில், 7வது தெருவில், 3,060 சதுர அடியை, கபீர் முகமது என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வசித்து வருகிறார்.
இது தொடர்பாக அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78ன் கீழ், இணை கமிஷனர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இடத்தின் ஒரு பகுதியை கபீர் முகமது, தன் சகோதரர் பஷீர் முகமது என்பவருக்கு கொடுத்து, அவர் அதில் கட்டுமானப் பணி மேற்கொண்டார்.
இத்தகவல் அறிந்த அறநிலையத்துறையினர், கடந்த மாதம் முறைப்படி 'நோட்டீஸ்' வழங்கினர்.
அதையும் மீறி கட்டுமானப் பணி நடந்தது.
இதையடுத்து நேற்று, கோவில் செயல் அலுவலர் கங்காதேவி தலைமையில், அறநிலையத்துறை ஊழியர்கள் முன்னிலையில், புதியதாக கட்டப்பட்டு வந்த கட்டடம், 'பொக்லைன்' வாயிலாக இடிக்கப்பட்டது.
இது தொடர்பாக மவுன்ட் காவல் நிலையத்தில், பஷீர் அகமது புகார் அளித்தார்.
காவல் நிலையம் சென்ற அறநிலையத் துறையினர், உரிய ஆவணங்களைக் காண்பித்து, இனி கட்டுமானப் பணி மேற்கொள்ள மாட்டேன் என, கபீர் முகமதுவிடம் எழுதி வாங்கினர்.
இந்த விவகாரம், அறநிலையத்துறை இணை கமிஷனர் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், அதே தெருவில் புது கட்டடம் கட்டி வந்த சண்முகம் என்ற ஆக்கிரமிப்பாளருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், கோவில் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள், புதிய கட்டடம் கட்டக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி கோவில் இடம் விரைவில் மீட்கப்படும் எனவும், அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

