/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தேர் நிறுத்தம் கட்டுமான பணி மந்தம் திருக்கச்சூரில் பக்தர்கள் வேதனை
/
தேர் நிறுத்தம் கட்டுமான பணி மந்தம் திருக்கச்சூரில் பக்தர்கள் வேதனை
தேர் நிறுத்தம் கட்டுமான பணி மந்தம் திருக்கச்சூரில் பக்தர்கள் வேதனை
தேர் நிறுத்தம் கட்டுமான பணி மந்தம் திருக்கச்சூரில் பக்தர்கள் வேதனை
ADDED : ஆக 08, 2024 01:21 AM

மறைமலை நகர்,:சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் கிராமத்தில், பழமையான கச்சபேஸ்வரர் உடனுறை அஞ்சாட்சி தாயார் கோவில் உள்ளது. இக்கோவில், சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு, சித்திரை மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக தேரோட்டத்துடன் நடத்தப்படும். 33 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த தேரோட்டம், கடந்த 2015ம் ஆண்டு புதிய தேர் செய்யப்பட்டு, மீண்டும் நடத்தப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவில் திருப்பணி காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த ஏப்ரல் மாதம், கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.
தேரோட்டம் நடைபெறாததால், தேரினை கோவிலுக்கு எதிரில் கிழக்கு மாட வீதியில், இரும்பு தகடுகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது. தகரங்கள் பழமையானதால், தேரின் மேல் பகுதி சரியாக மூடப்படாமல் மழை காலங்களில் தண்ணீர் உள்ளே சென்று தேர் நனைந்தது.
தேர் நனையாமல் இருக்க, கான்கிரீட் சுவர்கள் கொண்டு அறை அமைக்க, பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த மே மாதம் 'கான்கிரீட்' சுவர் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டன.
ஆனால், முதற்கட்ட பணிகளுடன் கட்டட வேலைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக, பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது:
'கான்கிரீட்' சுவர் அமைக்கும் பணிகள் மந்தகதியில் நடக்கின்றன. தற்போது, தேர் குளக்கரை அருகில், தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டு உள்ளது. கடந்த ஒரு மாதமாக, மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
பலத்த காற்று வீசும் போது, தார்ப்பாய் கிழிந்து, தேர் முழுதும் நனையும் அபாயம் உள்ளது. எனவே, கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பல கட்டங்களாக பிரித்து நிதி ஒதுக்கப்படுகிறது. முதற்கட்டமாக ஒதுக்கீடு செய்த நிதிக்கான பணிகள் நிறைவடைந்து விட்டன.
இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளன. தற்போது, தேர் நனையாதபடி பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.