/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழவேலி பாலாற்று குடிநீர் 45 நாட்களில் வினியோகம்
/
பழவேலி பாலாற்று குடிநீர் 45 நாட்களில் வினியோகம்
ADDED : ஆக 08, 2024 02:11 AM

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு, பழவேலி, மாமண்டூர் பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் இருந்து, குழாய் வாயிலாக தண்ணீர் தலைமை நீரேற்று நிலையத்திற்கு ஏற்றப்படுகிறது.
பணி துவக்கம்
அதன்பின், நகரில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குழாய் வாயிலாக தண்ணீர் ஏற்றப்படுகிறது. பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, குடிநீர் குழாய்கள் மற்றும் மின் கேபிள்கள் அடித்து செல்லப்படுகின்றன.
இதனால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, அரசிடம் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.
தொடர்ந்து, கூடுதல் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தி, குடிநீர் குழாய் இணைப்புகளை சீரமைக்க, குடிநீர் பணிக்கான மூலதன மானிய நிதி 2022 - 23 நிதியாண்டில், 7.60 கோடி ரூபாய், அரசு நிதி ஒதுக்கீடு செய்தது.
அதற்கு, கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கி, பழவேலி பாலாற்றில் புதிதாக ஐந்து நீர் உறிஞ்சு கிணறுகள் மற்றும் தலா இரண்டு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி, இரும்பு துாண்கள் அமைத்து, பைப் லைன் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது, ஐந்து கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றுள்ளன. ஆனால், இரும்பு துாண்கள் அமைத்து, பைப்லைன் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
வலியுறுத்தல்
இப்பணி நிறைவு பெறாததால், தினமும் குடிநீர் வழங்க முடியாத சூழல் உள்ளது. எனவே, மழைக்காலத்திற்குள் அனைத்து பணிகளையும் முடித்து, மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என, நகரவாசிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி கமிஷனர் ஆண்டவன் கூறியதாவது:
பழவேலி பாலாற்று புதிய குடிநீர் திட்டப்பணிகள், 90 சதவீதம் முடிந்துள்ளன. மற்ற பணிகள் அனைத்தும் முடித்து, 45 நாட்களில் நகரவாசிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.