/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் பெண் கொலை முதியவருக்கு ஆயுள் தண்டனை
/
செய்யூரில் பெண் கொலை முதியவருக்கு ஆயுள் தண்டனை
ADDED : ஜூன் 28, 2024 02:09 AM

செங்கல்பட்டு:செய்யூர் அடுத்த கீழ்நீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்த லட்சுமிதாஸ் மனைவி தேசம்மாள், 40. இவர், தேசிய ஊரக வேலை வாய்ப்பு நாறு நாள் திட்ட மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.
இவரிடம், 2016, பிப்., 9ம் தேதி, தண்டரை கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 67, என்பவர், தனது உறவினர் மூன்று பேருக்கு வேலைக்கு வந்தது போல், வருகை பதிவேட்டில் பதிவு செய்து சம்பளம் வழங்க வேண்டும் என, ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.
இதற்கு, தேசம்மாள் மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சபாபதி, தேசம்மாளை சரமாரியாக வெட்டி கொலை செய்தார்.
இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சபாபதியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சசிரேகா ஆஜரானார்.
இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், சபாபதிக்கு ஆயுள் தண்டனையும், 7,500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
அதன்பின், அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து, சென்னை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.