/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஊர் பெயர் அழிப்பு: கப்பிவாக்கம் மக்கள் கொதிப்பு
/
ஊர் பெயர் அழிப்பு: கப்பிவாக்கம் மக்கள் கொதிப்பு
ADDED : மார் 05, 2025 11:43 PM

செய்யூர், செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சி கிழக்கு கடற்கரை சாலையில் பேரூராட்சி அலுவலகம் எதிரே பேருந்து நிறுத்தம் செயல்படுகிறது.
கடப்பாக்கம், ஆலம்பரைக்குப்பம், கப்பிவாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்காக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு செல்லும் ஏராளமானோர் தினசரி பயன்படுத்துகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே இருந்து பேருந்து நிறுத்த நிழற்குடை பயன்படுத்த முடியாத நிலையில் பழுதடைந்து இருந்ததால், பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.
புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், 2023-24ம் ஆண்டு செய்யூர் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 8 லட்சத்தில் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டு திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருந்தது.
கடப்பாக்கம் பேருந்து நிறுத்தமாக செயல்பட்டு வரும் நிலையில், பேருந்து நிறுத்த நிழற்குடை பெயர் பலகையில் இடைக்கழிநாடு பேரூராட்சி கடப்பாக்கம் கப்பிவாக்கம் என குறிப்பிடப்பட்டு இருந்ததால், கடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிலர் நிழற்குடையில் கப்பிவாக்கம் பெயரை கருப்புபெயின்டால் அழித்தனர்.
இதையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் இருக்க பெயர் பலகை தற்காலிகமாக மூடப்பட்டது.
நேற்று கப்பிவாக்கம்கிராமத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வருவாய் பதிவேட்டின் படி கப்பிவாக்கம் கிராம எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கட்டப்பட்ட நிழற்குடையின் பெயர் பலகையில் கிராமத்தின் பெயரை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடைக்கழிநாடு பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட செயல் அலுவலர் மகேஸ்வரன், இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.