/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆந்திராவில் புதிய அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு! பாலாற்று விளை நிலங்கள் பாழாகும் அபாயம்
/
ஆந்திராவில் புதிய அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு! பாலாற்று விளை நிலங்கள் பாழாகும் அபாயம்
ஆந்திராவில் புதிய அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு! பாலாற்று விளை நிலங்கள் பாழாகும் அபாயம்
ஆந்திராவில் புதிய அணை கட்ட விவசாயிகள் எதிர்ப்பு! பாலாற்று விளை நிலங்கள் பாழாகும் அபாயம்
ADDED : ஜூன் 30, 2024 11:11 PM

காஞ்சிபுரம்: பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மாதவப்பள்ளி, யாதவப்பள்ளி ஆகிய இரு இடங்களில் அணை கட்டப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கும் என, கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் துவங்கும் பாலாறு, ஆந்திர மாநிலம் வழியாக தமிழகத்தில் உள்ள திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பயணித்து, வங்கக்கடலில் கலக்கிறது.
கர்நாடகாவில் 93 கி.மீ., துாரமும், ஆந்திராவில், 33 கி.மீ., துாரமும், தமிழகத்தில் 222 கி.மீ., துாரமும் பாலாறு பாய்கிறது.
தமிழகத்தில் அதிகபடியான துாரம் பாயும் பாலாற்றின் பல்வேறு இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சில இடங்களில் தடுப்பணை கட்டிய நிலையில், போதிய தடுப்பணைகள் கட்டப்படாமலேயே உள்ளன.
ஆனால், 33 கி.மீ., துாரம் மட்டுமே பாலாறு பாயும் ஆந்திர மாநிலத்தில், அம்மாநில அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், ஆந்திர மாநிலம், குப்பம் தொகுதியில் உள்ள ரெட்டிக்குப்பம் என்ற இடத்தில், பாலாற்றின் குறுக்கே, 215 கோடி ரூபாய் மதிப்பில், புதிய அணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அடிக்கல் நாட்டினார்.
இது, தமிழக அரசு, விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர், புதிதாக பொறுப்பேற்று உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளி ஆகிய இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்படும் என, சில நாட்களுக்கு முன் தெரிவித்துள்ளார்.
இதற்கு, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், பாலாறு பாயும் மாவட்டமான காஞ்சிபுரத்தில், விவசாயிகள் மற்றும் பல்வேறு இயக்கத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில், புதிய தடுப்பணைக்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டியதற்கே, காஞ்சிபுரத்தில், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், பாலாற்றில் தடுப்பணை கட்டப் போவதாக தெரிவித்துள்ளதால், பாலாறு பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில், மாபெரும் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஆந்திர அரசு தடுப்பணை கட்டினால், தமிழகத்திற்கு ஏற்படும் பாதிப்பு குறித்து, இப்பயணத்தில் தெரிவிக்கப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரு மாவட்டங்களிலும், பாலாற்று நீரை நம்பி, 100க்கும் மேற்பட்ட ஏரிகளும், அதன் வாயிலாக 50,000 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
மேலும், தாம்பரம், பல்லாவரம் போன்ற இடங்களுக்கு பாலாறு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுகின்றன.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு திருப்பாற்கடல், ஓரிக்கை ஆகிய இடங்களில் உள்ள பாலாற்றில் இருந்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு, பாலாற்றை நம்பி விவசாயிகள் மட்டுமல்லாமல், நகர்ப்புற மக்களும் வாழ்கின்றனர்.
ஏற்கனவே ஆந்திர அரசு கட்டிய அணைகளால், பாலாற்றில் நீர்வரத்து குறைந்து காணப்படுகின்றன. மேலும், புதிய அணைகளை அம்மாநில அரசு கட்டினால், நீரோட்டம் குறைந்து குடிநீர், விவசாயத்திற்கு கடும் பாதிப்பு ஏற்பட்டு, பாலாறு பாலைவனம் போல மாறிவிடும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் நீர்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பன்மாநில நதிநீர் பங்கீட்டு பிரிவு தான் கவனிக்கின்றனர். அதற்கு, சேர்மன், உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
'அவர்கள் தான், சட்ட ரீதியான பிரச்னைகளையும், தொழில்நுட்ப விவகாரங்கள், நீதிமன்ற வழக்குகளையும் கவனிக்கின்றனர். இந்த அமைப்பு தான், பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டும் பிரச்னைகளை கவனிக்கின்றனர்' என்றார்.
வழக்கை துரிதப்படுத்த வேண்டும்
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டக் கூடாது. தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு, அணை கட்டும் நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.
- கே.நேரு,
மாவட்ட செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்.