/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
/
மதுராந்தகம் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
மதுராந்தகம் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
மதுராந்தகம் ஏரி உபரிநீர் கால்வாயை சீரமைக்க விவசாயிகள் வேண்டுகோள்
ADDED : ஏப் 25, 2024 12:36 AM

செய்யூர்:மதுராந்தகம் ஏரி, செங்கல்பட்டு மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியாக உள்ளது. இதன் பரப்பளவு 4,752 ஏக்கர். ஏரியில், 2,411 ஏக்கர் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், 932.49 ச.கி.மீ., நீர்வரத்து பகுதிகளாகவும் உள்ளன.
ஏரியின் முழு கொள்ளளவான 24.30 அடி வரையில், தண்ணீர் சேமிக்க முடியும். ஏரியின் வாயிலாக, மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில், கிராமங்களில் உள்ள 5,000க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஏரியை துார் வாரி சீரமைக்க, கடந்த 2021ம் ஆண்டு, 120 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த ஜூன் மாதம் முதல் ஏரி துார்வாரும் பணியில், பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அரசு மேலும் 43 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, அடுத்த 6 மாதங்களில் பணி முழுதும் முடிவடையும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுராந்தகம் ஏரியின் உயர்மட்ட உபரிநீர் கால்வாய் மோச்சேரி பகுதியில் உள்ளது. சுமார் 28 கி.மீ., நீளம் கொண்ட உயர்மட்ட உபரிநீர் கால்வாய், 30 ஏரிகளின் பிரதான நீர்வரத்து கால்வாயாக உள்ளது.
மதுராந்தகம் ஏரியில் துவங்கி, சிலாவட்டம், மாம்பாக்கம், அகத்திப்பட்டு, தேவாதுார், வீராணங்குன்னம் ஏரிகள் வழியாக சென்று, இறுதியில் செய்யூர் அருகே உள்ள வேட்டைக்காரகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் முடிகிறது.
இந்த உயர்மட்ட உபரிநீர் கால்வாய், 1980ம் ஆண்டு இறுதியாக துார் வாரப்பட்டது. கடந்த 43 ஆண்டுகளாக, துார் வாரப்படாமல் ஆங்காங்கே உள்ள மதகுகள் உடைந்து, கால்வாயில் மரங்கள் வளர்ந்து துார்ந்துள்ளன.
இதனால், மழைக்காலங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, விவசாய நிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
மேலும், உபரிநீர் கால்வாயில் போதிய தண்ணீர் செல்லாமல், கோடை காலத்தில் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைவதாக கூறப்படுகிறது.
மதுராந்தகம் ஏரி துார் வாரும் பணி நடந்து வருவதால், ஏரியின் உயர்மட்ட உபரிநீர் கால்வாயையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

