/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பட்டாபிராம் மின் நிலையத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; 46,000 வீடுகள் இருளில் மூழ்கின
/
பட்டாபிராம் மின் நிலையத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; 46,000 வீடுகள் இருளில் மூழ்கின
பட்டாபிராம் மின் நிலையத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; 46,000 வீடுகள் இருளில் மூழ்கின
பட்டாபிராம் மின் நிலையத்தில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து; 46,000 வீடுகள் இருளில் மூழ்கின
ADDED : மே 06, 2024 12:00 AM

ஆவடி அடுத்த பட்டாபிராம், கோபாலபுரத்தில் 110/11 கிலோ வாட் திறன் கொண்ட துணை மின் நிலையம் செயல்படுகிறது. இங்கு 16,000 கிலோ வாட் திறன் கொண்ட மூன்று மின் மாற்றிகள் உள்ளன.
இங்கிருந்து, பட்டாபிராம், சேக்காடு, தண்டரை, கண்ணம்பாளையம், ஆவடி காமராஜர் நகர், பருத்திப்பட்டு மற்றும் மேல்பாக்கம் பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11:00 மணி அளவில், 'பவர் கண்ட்ரோல் கேபிள்' எனும் மின் கட்டுப்பாட்டு வடத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இதில், 16,000 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி ஒன்று, பயங்கர சத்தத்துடன் கொழுந்து விட்டெரிந்தது. தொடர்ந்து, மேற்கூறிய பகுதிகளில் உள்ள 46,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியே இருளில் மூழ்கியது. பொதுமக்கள் உஷ்ணத்தால், வீடுகளின் வெளியேயும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் புகுந்தனர்.
குழந்தைகள் முதல் முதியோர் வரை, இரவு துாக்கமின்றியும், வீட்டில் தண்ணீருக்காக மோட்டார்கள் போட முடியாமலும் மக்கள் அவதியடைந்தனர்.
ஆவடி, அம்பத்துார், பூந்தமல்லி மற்றும் ஆவடி எச்.வி.எப்., பகுதிகளில் இருந்து ஐந்து தீயணைப்பு வாகனங்களில், வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதற்குள், அருகில் இருந்த மற்றொரு மின் மாற்றியில் தீ பரவியது.
மின்மாற்றியில் இருந்த 12,000 லி., ஆயில் காரணமாக, அதிக உஷ்ணத்தால் தீ கட்டுக்குள் வராமல் கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். தீ அணைக்கப்பட்ட பின், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அதேநேரம், ஆவடி செயற்பொறியாளர் சவுந்தராஜன் மற்றும் பட்டாபிராம் உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார் தலைமையிலான அதிகாரிகள், மின் வினியோகம் செய்ய மாற்று ஏற்பாடுகள் செய்தனர்.
அதன்படி, பட்டாபிராம், ஆவடி, காமராஜர் நகர் மற்றும் மிட்னமல்லி துணை மின் நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை 3:30 மணி முதல் சீரான பின் வினியோகம் செய்யப்பட்டது.
விபத்தில் எரிந்து எலும்புக்கூடாக மாறிய மின்மாற்றியை, ராட்சத கிரேன் உதவியுடன் அகற்றும் பணியில் 50க்கும் மேற்றபட்ட மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, திருமுடிவாக்கம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படும் புதிய மின்மாற்றியை பொருத்தும் பணி துவங்கும்.
முன்னதாக, விபத்து குறித்து காட்டுத்தீ போல அப்பகுதியில் பரவியது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரூ.4 கோடி மதிப்பு
இரண்டு நாட்களில், புதிய மின்மாற்றி பொருத்தும் பணி முடிந்து விடும். நாளை மாலை முதல் சீரான மின் வினியோகம் செய்யப்படும். தீ விபத்தில், 4 கோடி மதிப்பிலான இரண்டு மின்மாற்றிகள் நாசமாகி உள்ளன.
பொதுமக்கள் இரவு வேளைகளில், ஒன்றுக்கும் மேற்பட்ட 'ஏசி'க்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- மின் வாரிய அதிகாரிகள்.
மின்மாற்றியில் ஏற்பட்ட ஆயில் கசிவால், தீயை அணைப்பது சவாலாக இருந்தது. தீயணைப்பு வீரர்கள் உயிரை பணயம் வைத்து, ஏ.எப்.எப்., போம் எனும் நுரை கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
- தென்னரசு, அலுவலர்,
மாவட்ட தீயணைப்பு துறை.
- -நமது நிருபர் -