/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு ஆய்வு
/
தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு ஆய்வு
தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு ஆய்வு
தாம்பரம் - வேளச்சேரி - கிண்டி மெட்ரோ இயக்க சாத்தியக்கூறு ஆய்வு
ADDED : ஆக 20, 2024 06:05 AM
சென்னை : 'தாம்பரம் - வேளச்சேரியை, கிண்டியுடன் இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்ட சாத்தியக்கூறு அறிக்கை, தமிழக அரசிடம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தற்போது, 54 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள், மூன்று வழித்தடங்களில் 69,180 கோடி ரூபாய் செலவில், 116 கி.மீ., துாரம் நடந்து வருகின்றன.
இதையடுத்து, பூந்தமல்லி - பரந்துார், கோயம்பேடு - ஆவடி என அடுத்தடுத்து, மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்த, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே, சென்னையின் பிரதான பகுதியாக இருக்கும் தாம்பரம் - வேளச்சேரிக்கு, மெட்ரோ ரயில் திட்டம் நீட்டிப்பது குறித்து, சாத்தியக்கூறு அறிக்கை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி கிடைக்கும் போது தான், பொது போக்குவரத்து வசதியை, மக்கள் அதிகளவில் பயன்படுத்துவர். இதற்கான, பணிகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் விரும்புகின்றன.
சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். அதன்படி, தாம்பரம் - வேளச்சேரியை கிண்டியுடன் இணைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவது குறித்த சாத்தியக்கூறு அறிக்கை இறுதிக்கட்டத்தில் உள்ளது.
வழித்தடங்கள், போக்கு வரத்து நெரிசல், செலவுகள் உள்ளிட்டவை குறித்து முழு விபரங்கள், அதில் இடம்பெறும்.
இந்த சாத்தியக்கூறு அறிக்கை, அரசிடம் விரைவில் அளிக்க உள்ளோம். இதற்கு, ஒப்புதல் அளித்தால் மட்டுமே, அடுத்தக்கட்டமாக டி.பி.ஆர்., எனப்படும் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

