/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொசுவத்தியால் தீ விபத்து தி.நகரில் காவலாளி பலி
/
கொசுவத்தியால் தீ விபத்து தி.நகரில் காவலாளி பலி
ADDED : பிப் 22, 2025 11:52 PM
மாம்பலம், பிப். 23- -
தி.நகர், நீலகண்ட மேத்தா தெருவில் பழமையான கட்டடம் அமைந்துள்ளது. இந்த கட்டடத்தில், 'பப்ளிக் செக்யூரிட்டி ஏஜன்சி' என்ற நிறுவனம் வாயிலாக நியமிக்கப்பட்ட, கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த மாணிக்கம், 71, என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக காவலாளியாக பணிபுரிகிறார்.
அந்த கட்டடத்தின் அருகே உள்ள சிறிய அறையில் மாணிக்கம் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு அந்த அறை தீப்பிடித்து எரிந்தது.
தேனாம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, இடுப்பிற்கு கீழ் எரிந்த நிலையில், மாணிக்கம் இறந்து கிடந்தார். மாம்பலம் போலீசார் உடலை மீட்டு, கே.கே., நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், மாணிக்கம் தான் படுக்கும் மெத்தை அருகே, கொசுவத்தி ஏற்றி வைத்துள்ளார். அதில் இருந்து தீ மெத்தையில் பரவியுள்ளது.
மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மாணிக்கத்தின் வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இதனால், திடீரென எழுந்து தப்பிக்க முடியாமல் அவர் உயிரிழந்திருக்கலாம் என, தெரிய வந்துள்ளது.

