/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை
/
கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை
கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை
கழிவு ஆயில் கசிவால் தீ விபத்து பழைய பொருள் கிடங்கு தீக்கிரை
ADDED : மே 02, 2024 01:23 AM

புழல்:புழல் அடுத்த சூரப்பட்டு- - அம்பத்துார் அணுகு சாலை, ஓம் சக்தி நகரில் அம்பத்துாரைச் சேர்ந்த அந்தோணி என்பவருக்கு சொந்தமான திறந்தவெளி கிடங்கு உள்ளது.
தகடு ஷீட்களான அந்த கிடங்கில், பழுதான பழைய பிரிட்ஜ், வாஷிங் மிஷின், 'ஏசி' மற்றும் வாகனம், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்டு, 50க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பேரல்களில் அடைக்கப்பட்ட கழிவு ஆயில் ஆகியவை இருந்தன.
இந்த நிலையில், நேற்று மதியம் 1:30 மணி அளவில், பழுதான பிரிட்ஜ், வாஷிங் மிஷின் ஆகியவற்றை, 'காஸ்' கட்டிங் மூலம் வெட்டி எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதில் இருந்த தீப்பொறி பேரலில் இருந்து கசிந்த கழிவு ஆயிலில் பட்டு, அந்த பேரல் தீப்பற்றி எரிந்தது. சற்று நேரத்தில் மளமளவென பரவிய தீ, கிடங்கின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவின. அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியே ஓடி உயிர் தப்பினர்.
அங்கிருந்து வெளியேறிய அடர்த்தியான கரும்புகையால் பகுதிவாசிகள் கண் எரிச்சல், மூச்சுத்திணறலுக்கு ஆளாகினர். அந்த கிடங்கிற்கு அருகில் பஞ்சு மெத்தை, தலையணை தயாரிக்கும் கிடங்கு, பழைய பிளாஸ்டிக், பேப்பர் வாங்கி விற்கும் கடை, கார் பழுது நீக்கும் கடை ஆகியவை உள்ளன. அவற்றிலும் தீ பிடித்து, அங்குள்ள பொருட்கள் எரிந்தன. அதில், தலா இரண்டு கார், வேன் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் தீக்கிரையாகின.
அம்பத்துார், மாதவரம், செங்குன்றம், கொளத்துார், வில்லிவாக்கம், வ.உ.சி., நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, வீரர்கள் வந்து, தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், டேங்கர் லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட குடிநீரும் தீயணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டன. இதனால், மாலை 5:00 மணி அளவில் ஒருவழியாக தீ அணைக்கப்பட்டது.
விபத்து குறித்து அம்பத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

