/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மீன்பிடி படகுகள் விபரங்கள் மீன்வள அலுவலர் சோதனை
/
மீன்பிடி படகுகள் விபரங்கள் மீன்வள அலுவலர் சோதனை
ADDED : மே 31, 2024 02:29 AM

மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ஊராட்சி ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு பேரூராட்சி ஆலம்பரைக்குப்பம் வரை, 75 கி.மீ., வங்க கடற்கரை, 36 மீனவர் பகுதிகள் உள்ளன.
மீன்வளத் துறையிடம் பதிவுபெற்ற 2,000த்திற்கும் மேற்பட்ட படகுகள், பதிவுபெறாத 200க்கும் மேற்பட்ட படகுகள்உள்ளன. பதிவுபெற்ற படகுகளுக்கு, மானிய விலை டீசல் வழங்கப்படுகிறது.
மீன்வளத் துறையினர், படகுகள் விபரங்கள் குறித்து ஆண்டுதோறும் ஆய்வு செய்வர். மீன்பிடி தடைக்காலம், கடந்தஏப்ரல் 15ம் தேதி துவங்கி, மீனவர்கள் மீன்பிடியை தவிர்த்துள்ளனர்.
இத்தடை ஜூன் 15ம் தேதி முடிந்து, மீன்பிடி தொழில் துவங்கும். தடைக்கால நிவாரணமாக, 7,800க்கும் மேற்பட்டோருக்கு, தலா 8,000 ரூபாய் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், மீன் வளத்துறையினர், வருடாந்திர ஆய்வாக படகுகளை தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். இதற்காக நியமிக்கப்பட்ட வெளிமாவட்ட அலுவலர் குழுவினர், மீனவ பகுதிதோறும் சென்று, படகுகளை அவற்றின் உரிமையாளர் முன்னிலையில் பார்வையிட்டனர்.
படகின் பதிவெண், சான்று, இன்ஜின் எண், உரிமையாளர் ஆதார் எண் ஆகியவற்றை சரிபார்த்தனர். படகின் கட்டமைப்பு, பராமரிப்பில் உள்ளதா, கடலில் இயக்குவதற்கேற்ற உறுதித்தன்மை, மானிய டீசல் பெறும் பதிவு புத்தகம்உள்ளிட்டவை குறித்தும் பரிசோதித்தனர்.
பதிவு செய்யப்படாத படகுகளையும் கண்டறிந்து, பதிவின்றி இயக்குவது சட்டத்திற்கு புறம்பானது, அரசிடம் எத்தகைய பயனையும் பெற இயலாது என்பதை விளக்கி, அவற்றின் உரிமையாளர்களிடம் விரைந்து பதிவுசெய்ய அறிவுறுத்தினர்.