/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ரூ.94.50 லட்சம் மோசடி; ஆதம்பாக்கம் நபர் கைது
/
ரூ.94.50 லட்சம் மோசடி; ஆதம்பாக்கம் நபர் கைது
ADDED : ஆக 19, 2024 12:25 AM

ஆவடி: அம்பத்துார், ராமாபுரம், திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி, 45. இவர், கடந்த டிச., 28ம் தேதி, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்திருந்தார்.
அந்த புகாரில் குறிப்பிடப்பட்டு இருந்ததாவது:
என் கணவர் ராஜ்குமார், கத்தாரில் பணிபுரிந்து வருகிறார். என் உறவினரான மாற்றுத்திறனாளி கண்ணன் என்பவருக்கு வேலை தேடிக் கொண்டிருந்தேன்.
அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும், யுவா என்பவர் வாயிலாக கார்த்திகேயன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. கார்த்திகேயன், 'சென்னை தலைமை செயலகத்தில் கேன்டீன் நடத்தி வருவதால், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை தெரியும்' எனக் கூறினார்.
உறவினர் கண்ணன் மாற்றுத்திறனாளி என்பதால், எளிதில் அரசு வேலை கிடைக்கும் எனக்கூறி, 3 லட்சம் ரூபாய் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.
அதேபோல, அண்ணா நகரில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை 70 லட்சம் ரூபாய்க்கு பெற்று தருவதாக என்னிடம் கூறினார்.
மேலும், நியூயார்க் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என, கத்தாரில் உள்ள என் கணவர் ராஜ்குமாரிடம், வீடியோ காலில் பேசி அவரிடம் ஆசை வார்த்தை கூறினார்.
அதன்படி, என் கணவர் கார்த்திகேயனின் வங்கி கணக்கிற்கு 94.50 லட்சம் ரூபாய் அனுப்பியுள்ளார். இதையடுத்து, வீடும் வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றினார்.
எனவே, மோசடியில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், தலைமறைவாக இருந்த ஆதம்பாக்கம், பாலாஜி நகரைச் சேர்ந்த கார்த்திகேயன், 33, என்பவரை, நேற்று கைது செய்தனர்.