/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா போதையில் 'சம்பவத்துக்கு' கத்திகளுடன் புறப்பட்ட சிறுவர்கள் கைது
/
கஞ்சா போதையில் 'சம்பவத்துக்கு' கத்திகளுடன் புறப்பட்ட சிறுவர்கள் கைது
கஞ்சா போதையில் 'சம்பவத்துக்கு' கத்திகளுடன் புறப்பட்ட சிறுவர்கள் கைது
கஞ்சா போதையில் 'சம்பவத்துக்கு' கத்திகளுடன் புறப்பட்ட சிறுவர்கள் கைது
ADDED : மே 15, 2024 11:25 PM

சென்னை:சென்னையில் கஞ்சா கலாசாரம் அதிகரித்துள்ள நிலையில், நாளுக்கு நாள் கஞ்சா போதை நபர்களால் அரங்கேறும் சம்பவங்கள், பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதில், சிறுவர்களும் கஞ்சா போதையில் பலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடுவது, இவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகிறது. அந்த வகையில் கஞ்சா போதையில் நடந்துள்ள சில சம்பவங்கள் இதோ...
சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் நான்கு பேர், நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கிருந்து, ரேபிட்டோ வாயிலாக கார் ஒன்றை 'புக்கிங்' செய்துள்ளனர்.
அதன்படி வந்த திருநின்றவூர், சீனிவாசன் நகரைச் சேர்ந்த சுரேஷ், 32, என்பவரின் ஹோண்டோ ரக காரில் ஏறிய நால்வரும், மெரினா கடற்கரைக்கு செல்லும்படி கூறியுள்ளனர்.
கார் மெரினா கடற்கரை, அவ்வையார் சிலை அருகே வந்த போது, கலங்கரை விளக்கம் செல்ல வேண்டுமென, சிறுவர்கள் கூறியுள்ளனர்.
ஓட்டுனர் சுரேஷ், காரை திருப்பி கலங்கரை விளக்கம் சென்ற போது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த மெரினா போலீசார் காரை நிறுத்தியுள்ளனர்.
பின், காரிலிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, நால்வரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்த போது, அவர்கள் மறைத்து வைத்திருந்த நான்கு கத்திகள் சிக்கின.
இதையடுத்து அவர்களை கைது செய்து, நான்கு மொபைல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
இவர்கள், இரவு நேரத்தில் கொலை திட்டத்துடன் சுற்றி வந்தனரா? அல்லது வழிப்பறி முயற்சியில் ஈடுபட்டனரா என, போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
* போலீஸ் சேவை மையம் சூறை
சென்னை, புழல், எம்.ஜி.ஆர்., நகரில், புழல் போலீஸ் நிலையத்தின் உதவி மையம் உள்ளது. இங்கு, நேற்று அதிகாலை கஞ்சா போதையில் சுற்றித் திரிந்த இருவர், வீடுகளின் கதவை பலமாக தட்டியும், வீட்டுக்கு வெளியே கிடந்த பொருட்களை துாக்கி வீசியும் ரகளை செய்துள்ளனர்.
மேலும், அங்குள்ள போலீஸ் சேவை மையத்தின் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை கல்லால் அடித்து நொறுக்கியுள்ளனர். தொடர்ந்து, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார், வேன், ஆட்டோ ஆகியவற்றின் கண்ணாடிகளை அடித்து உடைத்துவிட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
* சம்பவங்கள்
புழல், கதிர்வேடு, புத்தகரம், காவாங்கரை, மாதவரம் சுற்றுவட்டாரங்களில் கஞ்சா விற்பனை அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் நிம்மதி இழந்துள்ளனர்.
கடந்த மாதம் 23ம் தேதி இரவு, புழல் கதிர்வேடு அருகே, 'பைக்'கில் சென்ற இருவர், பட்டாக்கத்தியை சாலையில் உரசி, பொதுமக்களை பயமுறுத்தினர். அப்போது, காற்றுக்காக வீட்டிற்கு வெளியே நின்றிருந்த இருவரை, கத்தியால் கிழித்துவிட்டு தப்பினர்.
அதன் பின், திருவள்ளுவர் தெருவிலுள்ள பேக்கரி, கடைகளை அடித்து நொறுக்கினர். தொடர்ந்து, வீடுகளின் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், ஆட்டோக்களையும் அடித்து, சேதப்படுத்திவிட்டு தப்பினர். அந்த வழக்கில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
மாதவரம் பால்பண்ணை அடுத்த மாத்துார், எம்.எம்.டி.ஏ., மூன்றாவது தெருவில், கடந்த மாதம் 29ம் தேதி அதிகாலை, கஞ்சா, மது போதையில், இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கும்பல், அங்கிருந்த வீடு, ஜன்னல், ஆட்டோக்களை அடித்து சேதப்படுத்தினர்.
அவர்கள் பட்டாக்கத்தி, உருட்டுக்கட்டையுடன் ஆவேசமாக கூச்சலிட்டு, அட்டகாசம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தினர். மறுநாள், 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.
* போலீஸ்காரருக்கு அடி
அந்த வகையில் தற்போது, கஞ்சா போதை நபர் ஒருவர், பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரரை தாக்கியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரவாயல், முத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அமரேஷ் குமார், 29, அயனாவரம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிகிறார்.
இவர், நேற்று முன்தினம் இரவு அயனாவரம், மேட்டு தெருவில் பாதுகாப்பு பணியில், சீருடையுடன் நின்றிருந்தார். அப்போது, அங்கு மது போதையில் பைக்கில் வந்த நபர் ஒருவர், தன்னை பாரில் ஒருவர் தாக்கியதாக, அமரேஷ் குமாரிடம் கூறியுள்ளார்.
அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு அமரேஷ் குமார் கூறியதும், 'நீயும் போலீஸ் தான' எனக்கூறி, வாக்குவாதம் செய்துள்ளார்.
பின், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில், அமரேஷ் குமாரை போதை நபர் தாக்கியுள்ளார்.
இதுகுறித்து அமரேஷ் குமார், அயனாவரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம், 27, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
இதுபோன்று, கஞ்சா போதை நபர்களால் அரங்கேறும் குற்றச்சம்பவங்கள், பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. எனவே, இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல், ஆரம்பத்திலேயே ஒடுக்க, அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.