/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா கடத்தியவருக்கு இரண்டு ஆண்டு சிறை
/
கஞ்சா கடத்தியவருக்கு இரண்டு ஆண்டு சிறை
ADDED : மே 05, 2024 11:55 PM
சென்னை : காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமதுபேட்டை சந்திப்பு அருகே கஞ்சா கடத்தி வரப்படுவதாக, காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, 2019 அக்., 22ல் தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் பையுடன் நின்றிருந்த நபரை பிடித்தனர். அவரது பையை சோதனையிட்ட போது, அதில், 4 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில் அவர், சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன், 29, என்பதும் தெரியவந்தது.
இது தொடர்பாக வழக்கு பதிந்த காஞ்சிபுரம் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், பூபாலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கு விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான முதலாவது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜுலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
எனவே, பூபாலனுக்கு, இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.