/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிகரித்து வரும் பேனர் கலாசாரம் செங்கை புறநகர் பகுதிகளில் அச்சம்
/
அதிகரித்து வரும் பேனர் கலாசாரம் செங்கை புறநகர் பகுதிகளில் அச்சம்
அதிகரித்து வரும் பேனர் கலாசாரம் செங்கை புறநகர் பகுதிகளில் அச்சம்
அதிகரித்து வரும் பேனர் கலாசாரம் செங்கை புறநகர் பகுதிகளில் அச்சம்
ADDED : பிப் 22, 2025 12:45 AM

மறைமலைநகர், செங்கல்பட்டு புறநகர் பகுதிகளில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கி வருவதால், அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்து, கட்டுப்படுத்த வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு புறநகர் பகுதிகளான மகேந்திரா சிட்டி, சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், பொத்தேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், நெடுஞ்சாலை ஓரம் மற்றும் அதை ஒட்டியுள்ள கட்டடங்கள் மீது, ராட்சத பேனர்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ஊரப்பாக்கம், வண்டலுார், கூடுவாஞ்சேரி -- நெல்லிக்குப்பம் சாலை, செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலை, சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, ஜி.எஸ்.டி., சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேனர்கள் அதிகரித்துள்ளன.
இதில் சினிமா, ரியல் எஸ்டேட், அரசியல் கட்சி விளம்பரம் என, வண்ண வண்ண பேனர்கள் காற்றில் அசைந்து, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் வைக்கப்பட்டு உள்ளன.
இதை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
சாலை சந்திப்பு மற்றும் அதன் அருகில் எவ்விதத்திலும் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, நீதிமன்றம் பல முறை அறிவுறுத்தியும், தொடர்ந்து பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம், மாநில நெடுஞ்சாலை துறை செயலர் செல்வராஜ், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அதில், அரசின் உத்தரவை சுட்டிக்காட்டி, நெடுஞ்சாலைத் துறை எல்லை மற்றும் மையத்தடுப்புகளில் விளம்பர பலகைகள் வைக்க அனுமதி கொடுத்திருந்தால், ரத்து செய்ய வேண்டும். அவற்றை உடனே அகற்ற வேண்டும்.
அரசு உத்தரவை உடனடியாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் கடந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் எந்த பகுதியிலும் பேனர்கள் அகற்றப்படவில்லை.
ஆனால், புதிது புதிதாக பேனர் வைக்க, பெரிய பெரிய இரும்பு சாரங்கள் நீர் நிலை பகுதிகளிலும் அமைக்கப்பட்டு வருகின்றன. பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன், அனைத்து பேனர்கள், இரும்பு சாரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு மழைக்காலத்தின் போது ஊரப்பாக்கம் பகுதியில் ஜி.எஸ்.டி., சாலை கட்டடத்தின் மேல் தளத்தில் அமைக்கப்பட்டு இருந்த பேனர், இரும்பு சாரத்துடன் முறிந்து கீழே விழுந்தது. நல்வாய்ப்பாக, உயிர் சேதமின்றி வாகன ஓட்டிகள் தப்பினர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் முன், மாவட்ட நிர்வாகம் பேனர்களை அகற்ற வேண்டும். அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- த.கண்ணன், தனியார் நிறுவன ஊழியர்,
சிங்கபெருமாள் கோவில்.

