/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கால அவகாசம் கேட்டு முறையீடு
/
ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கால அவகாசம் கேட்டு முறையீடு
ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கால அவகாசம் கேட்டு முறையீடு
ஜி.எஸ்.டி., சாலையில் ஆக்கிரமிப்பு கால அவகாசம் கேட்டு முறையீடு
ADDED : ஜூலை 21, 2024 07:38 AM

கூடுவாஞ்சேரி : நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி, சீனிவாசபுரம் ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள அணுகு சாலையை ஆக்கிரமித்து, அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பெயர் பலகை மற்றும் படிக்கட்டுகள் அமைத்துள்ளனர்.
இதனால், இந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
நேற்று முன்தினம் மாலை நெடுஞ்சாலைத்துறையினர், விரிவாக்க பணியில் ஈடுபட்டு, ஆக்கிரமிப்புகளை ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றினர்.
வணிகர் நல சங்க நிர்வாகிகள், தாசில்தாரிடம் கால அவகாசம் கேட்டு, நேற்று காலை 12:00 மணிக்கு வண்டலூர் தாசில்தார் அலுவலகத்தில், நகராட்சி தலைவர் கார்த்திக், வணிகர் சங்க தலைவர் இந்திரஜித் மற்றும் நிர்வாகிகளுடன், தாசில்தார் புஷ்பலதா ஆலோசனை நடத்தினார்.
அப்போது, பல்லாவரத்தில் இருந்து, செங்கல்பட்டு வரை உள்ள ஜி.எஸ்.டி., சாலையின் இருபுறமும், வார விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து நாட்களிலும் கடும் நெரிசல் ஏற்படுகிறது.
நடைபாதை கடைகள் மற்றும் அணுகுசாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகள், விளம்பர பலகைகள், கொடிக்கம்பங்கள், சங்கங்களின் பெயர் பலகைகள் ஆகியவற்றை அகற்றி, போக்குவரத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அப்பணியை, நெடுஞ்சாலைத்துறையினர் செய்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வணிகர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் முன்வர வேண்டும் என, தாசில்தார் தெரிவித்தார்.
அதற்கு, படிக்கட்டுகள் மற்றும் விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை ஜே.சி.பி., இயந்திரம் வாயிலாக அகற்றும் போது, எங்களுக்கு அதிகமான சேதம் ஏற்படுகிறது.
எனவே, நாங்களே அகற்றிக் கொள்ள, எங்களுக்கு கால அவகாசம் வேண்டும் என முறையிட்டனர்.
அதை தொடர்ந்து, ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டது. அதற்குள் அகற்றாவிட்டால், நெடுஞ்சாலைத் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவர் என, தெரிவித்தார்.
மேலும், நடைபாதை கடைகளை அகற்றி, நந்திவரம் -- கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தின் அருகே உள்ள உழவர் சந்தைக்கு மாற்றி, நகராட்சிக்கு வருமானம் வருவதற்கு ஏற்பாடு செய்யலாம் என, தாசில்தார் கேட்டுக் கொண்டார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக, நகராட்சி தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.