/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை புத்தக திருவிழாவில் உடல் ஆரோக்கிய ஆலோசனை
/
செங்கை புத்தக திருவிழாவில் உடல் ஆரோக்கிய ஆலோசனை
ADDED : பிப் 27, 2025 12:08 AM

செங்கல்பட்டு, செங்கல்பட்டு புத்தக திருவிழாவிற்கு வரும் பொதுமக்களுக்கு, உடல் ஆரோக்கியம் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதியார் மன்றம் சார்பில், ஆறாவது ஆண்டு செங்கை புத்தக திருவிழா, செங்கல்பட்டு அலிசன்காசி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், 20ம் தேதி துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது.
இங்கு, செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கு, இயற்கை மருத்துவ டாக்டர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
அதில் உடல் ஆரோக்கியம், சமச்சீர் உணவு, துரித உணவுகளின் பாதிப்பு, உடற்பயிற்சியின் அவசியம் என, பல்வேறு உடல்நலம் சார்ந்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
மன அழுத்த மேலாண்மையில் யோகா, தியானம், மூச்சுப்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.
நேர்முறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும். நல்ல புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என வழிகாட்டப்பட்டது.
புத்தக திருவிழாவில், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், மாவட்ட கணக்கு அலுவலர் சசிகலா, நகர்மன்ற தலைவர் தேன்மொழி உள்ளிட்ட பலர் பேசினர்.
இன்று 27ம் தேதி, 'உள்ளதை சொல்வேன்' என்ற தலைப்பில், பட்டிமன்ற நடுவர் சுகி.சிவம், 'மிகினும் குறையினும் நோய் செய்யும்' என்ற தலைப்பில், சித்த மருத்துவர் சிவராமன் ஆகியோர் பேசுகின்றனர். இதில், மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்கலாம்.

