/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புலிகுன்றம் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
/
புலிகுன்றம் பள்ளி வகுப்பறை கட்டடம் திறப்பு
ADDED : ஆக 15, 2024 07:58 PM
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட புலிகுன்றம் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை தொடக்கப்பள்ளி இயங்குகிறது. புலிகுன்றம், மேலப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட பகுதியினர், இங்கு பயில்கின்றனர்.
இங்கு ஐந்தாம் வகுப்பு பயின்றவர்கள், நடுநிலை கல்வி கற்க, 3 கி.மீ., தொலைவில் உள்ள திருக்கழுக்குன்றம் மற்றும் பிற இடங்களுக்கு சென்று சிரமப்படுகின்றனர்.
இப்பள்ளியை நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என, இப்பகுதியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதற்கேற்ப, வகுப்பறை கட்டட வசதி தேவை என்பதால், தாட்கோ நிதியில், 1.20 கோடி ரூபாய் மதிப்பில், கீழ்தளத்தில் மூன்று, மேல்தளத்தில் மூன்று என, ஆறு வகுப்பறைகளுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டது. மேலும், சுகாதார வளாக கட்டடமும் கட்டப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின், இக்கட்டடத்தை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பள்ளியில் நடந்த விழாவில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, மாணவ - மாணவியருக்கு இனிப்பு வழங்கினார்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவர் அரசு, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரிமளா, தலைமையாசிரியை வைஜெயந்திமாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

