/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆடு திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பு போலீசார் ரோந்து செல்ல வலியுறுத்தல்
/
ஆடு திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பு போலீசார் ரோந்து செல்ல வலியுறுத்தல்
ஆடு திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பு போலீசார் ரோந்து செல்ல வலியுறுத்தல்
ஆடு திருடர்கள் நடமாட்டம் அதிகரிப்பு போலீசார் ரோந்து செல்ல வலியுறுத்தல்
ADDED : ஜூலை 31, 2024 02:19 AM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், 39 ஊராட்சிகளை உடையது. இதில், சிங்கபெருமாள் கோவில், வெண்பாக்கம், கொளத்துார், குருவன்மேடு, அஞ்சூர், கொண்டமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில், விவசாயிகள் மாடுகள், வெள்ளாடு, செம்மறியாடுகளை வளர்ந்து வருகின்றனர்.
மேய்ச்சலுக்கு, ஆடுகளை மலைகள் மற்றும் அறுவடை முடிந்த வயல்களுக்கு ஓட்டிச்செல்வர். இவ்வாறு ஓட்டிச்செல்லும் போது, இருசக்கர வாகனங்களில் வரும் மர்ம நபர்கள், ஆடு மேய்ப்பர்கள் அசரும் நேரத்தில், ஆடுகளை துாக்கிச் செல்கின்றனர்.
கடந்த மாதம், செங்கல்பட்டில் வீட்டின் அருகில் இருந்த பட்டியில் இருந்த ஆடுகளை, கார்களில் வந்த மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இது குறித்து, ஆடு வளர்ப்போர் கூறியதாவது:
ஆடி மாதம் கோவில் திருவிழா, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில், ஆடுகளை நல்ல விலைக்கு விற்க முடியும். இதன் காரணமாக, கடந்த ஒரு மாதமாக தனியாக மேயும் ஆடுகளை குறி வைத்து, மர்ம நபர்கள் மீன்பிடி வலையுடன் சுற்றி வருகின்றனர்.
மீன் வலையை வீசும் போது, அதில் சிக்கும் ஆடுகளை கண் இமைக்கும் நேரத்தில் துாக்கி செல்கின்றனர்.
மேய்ச்சல் நிலங்கள் மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களில் வெள்ளாடுகளை மேய்க்கும் போது, வாகனங்களில் வரும் ஆடு திருடர்கள் துாக்கி செல்வதால், ஆடு மேய்ப்பர்களால் துரத்திப் பிடிக்க முடிவதில்லை.
ஆடி மாதத்தில், 6,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை ஆடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதே போல, இரவு நேரங்களில் காடுகளில் சுற்றும் மாடுகளும், இந்த பகுதியில் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. இதை தடுக்க, போலீசார் ரோந்து சென்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

