/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் : மனுக்களுடன் திரண்ட கிராம மக்கள்
/
செங்கை ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் : மனுக்களுடன் திரண்ட கிராம மக்கள்
செங்கை ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் : மனுக்களுடன் திரண்ட கிராம மக்கள்
செங்கை ஊராட்சிகளில் சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம் : மனுக்களுடன் திரண்ட கிராம மக்கள்
ADDED : ஆக 15, 2024 11:17 PM

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், சுதந்திர தின விழாவையொட்டி, சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த, ஊராட்சி தலைவர்களுக்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். இதில், 358 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடந்தது. மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், வையாவூர் ஊராட்சியில், கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
திம்மாவரம்
திம்மாவரம் ஊராட்சியில், தலைவர் நீலமேகம் தலைமையில், நேற்று கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், சமூக ஆர்வலர் பாண்டியன் மனு அளித்தார்.
அந்த மனுவில், ஊராட்சியின் தெருக்களில், சாலையை ஆக்கிரமித்து வீடுகள் முன்பாக சாய்வு தளங்கள் பெரிய அளவில் அமைத்துள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மழைநீர் கால்வாய், கான்கிரீட் சாலை அமைத்து தர வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கைகளை, வட்டார வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனருக்கு, ஊராட்சி நிர்வாகம் அனுப்பி வைத்தது.
அமைச்சர் பங்கேற்பு
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவிலில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற பெண்கள், கழிவு நீர் கால்வாய் பிரச்னை, சிமென்ட் சாலை வசதி, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அப்போது, அமைச்சர் அன்பரசன் கூறியதாவது:
கழிவு நீர் கால்வாய், சாலை அமைக்கும் பணிகள், ஒவ்வொரு பகுதிகளாக நடைபெற்று வருகின்றன. அதே போல, நீர்நிலைகள் தவிர்த்து, மற்ற பகுதிகளில் நீண்ட காலமாக வசிப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேய்க்கால் புறம்போக்கு பகுதிகளில் வசிப்போருக்கு பட்டா வழங்குவது தொடர்பான வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
கிராம சபை நடத்துவதன் முக்கிய நோக்கம், நமது கிராமத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள், மக்களுக்கு நேரடியாக தெரிய வேண்டும் என்பது தான்.
இந்த ஊராட்சியில், தேசிய ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு, அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 15 நிதிக்குழு திட்டங்களின் வாயிலாக, பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம், செங்கல்பட்டு சப் - கலெக்டர் நாராயண சர்மா, கூடுதல் ஆட்சியர் அனாமிகா, பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மண்ணிவாக்கம், வேங்கடமங்கலம், நெடுங்குன்றம் உள்ளிட்ட ஊராட்சிகளில், அந்தந்த ஊராட்சி தலைவர்களின் தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில், குடிநீர், கழிவுநீர் கால்வாய் சீரமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் உள்ளிட்டவை குறித்து மனு அளித்தனர்.
வேங்கடமங்கலத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு, வி.ஐ.டி., பல்கலையின் என்.எஸ்.எஸ்., மாணவ- - மாணவியர் பார்வையிட வந்தனர். அங்கு அவர்கள், கல்லூரி சார்பில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
திருப்போரூர்
திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 50 கிராம ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சியின் தணிக்கை, பொது நிதி செலவினம், திட்ட பணிகள், நுாறு நாள் வேலை உறுதி திட்டம் உட்பட, பல்வேறு பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மடையத்துார் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். படூர் ஊராட்சியில் நடந்த கூட்டத்தில், 500 பேருக்கு சமபந்தி விருந்து நடந்தது.